ராகுலுக்கு விசாரணை குழு நோட்டீஸ் அனுப்புமா? முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி
ராகுலுக்கு விசாரணை குழு நோட்டீஸ் அனுப்புமா? முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி
ADDED : மே 03, 2024 11:19 PM

ராய்ச்சூர் : ''ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல், 400 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறிய, காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம், சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்த வேண்டும்,'' என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
ராய்ச்சூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 400 பெண்களை பலாத்காரம் செய்ததாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார். இந்தளவு புள்ளி விபரங்களுடன் கூறிய அவருக்கு, சிறப்பு விசாரணை குழுவினர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
'பாதிக்கப்பட்ட பெண்களிடம் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று ராகுல் கூறியுள்ளார். இது பற்றி ஏற்கனவே தெரிந்த அவர், முன்னரே பிரதமரிடம் ஏன் கூறவில்லை. எதற்காக காத்திருந்தீர்கள்? மே 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த பின், இவ்விஷயம் மறைந்துவிடும்.
* ஆபாச படம்
கடந்த காலங்களில் நீங்கள் (சிவகுமார்) என்ன செய்தீர்கள் என்பது உலகம் அறியும். சினிமா கொட்டகையில் ஆபாசப்படம் காண்பித்து பணம் சம்பாதித்தார். அவருக்கு தான் அனுபவம் அதிகம். எம்.எல்.ஏ.,க்கள் வாழ்க்கையில் என்னென்ன செய்தீர்கள்; பெண்களை எப்படி பயன்படுத்தினீர்கள் என்பதும் தெரியும்.
இந்த வழக்கை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும். சிறுமியர் படங்களை வெளியில் கசிய விட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக செயல்படுகின்றீர்கள். பெண்கள் மீது காங்கிரசாருக்கு மரியாதை இல்லை.
இவ்விஷயத்தில் என்னை குறி வைக்கிறீர்கள். தேவகவுடா, பிரதமர் நரேந்திர மோடியை ஏன் இழுக்கிறீர்கள்? மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார். விசாரணை குழுவின் விசாரணையை திசை திருப்புகிறீர்கள்.
* முதல்வருக்கு பதிலடி
'பிரஜ்வல் வழக்கு தொடர்பாக தேவகவுடா, குமாரசாமி ஆகியோர், தங்கள் வீட்டுக்கு வழக்கறிஞர்களை வரவழைத்து பேசினர்' என முதல்வர் சித்தராமையா, தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனது பெற்றோரின் ஆரோக்கியம் முக்கியம். எனது தந்தையின் 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை எப்படி இருந்தது எனக்கு தெரியும். பிரஜ்வல், ரேவண்ணா விஷயத்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இரண்டு நாட்களாக அவர்கள் வீட்டில் தங்கியிருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.