நக்சல் இயக்கம் முற்றிலும் ஒழிக்கப்படுமா? மத்திய, மாநில அரசுகள் சந்திக்கும் சவால்
நக்சல் இயக்கம் முற்றிலும் ஒழிக்கப்படுமா? மத்திய, மாநில அரசுகள் சந்திக்கும் சவால்
ADDED : ஜூன் 03, 2025 12:54 AM

நம் நாட்டில் நக்சல் இயக்கத்தின் செயல்பாட்டை, அடுத்த ஆண்டு மார்ச் 2026க்குள் முற்றிலும் ஒழிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சமீபகாலமாக ஏராளமான நக்சல்களை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றாலும், அவர்களின் நடமாட்டத்தை முழுதும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
நடமாட்டம்
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல் நடமாட்டம் அதிகமுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியாமல் மாநில அரசுகள் தவித்து வருகின்றன.
நக்சல்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முற்றிலும் ஒழிக்க, மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அந்தந்த மாநில போலீஸ் படையுடன் இணைந்து, மத்திய பாதுகாப்பு படையினர் நக்சல் இயக்கத்தின் நடமாட்டத்தைக் கண்டறிந்து அழித்து வருகின்றனர்.
நக்சல் இயக்கத்தின் தலைவராக இருந்த தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரான பசவராஜூ என்பவரை பாதுகாப்பு படையினர் சமீபத்தில் சுட்டுக்கொன்றனர்.
இதனால், நக்சல் இயக்கத்தினர் தலைமை இன்றி தவித்து வருகின்றனர். எனினும், அந்த இயக்கத்தில் அடுத்தடுத்த நிலையில் உள்ள நபர்கள் தலைமை பொறுப்பை ஏற்று நக்சல் இயக்கத்தை வழிநடத்திச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளன.
அமைதி பேச்சு
இதையடுத்து மத்திய அரசு, நக்சல் இயக்கத்தை ஒழிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக நம் நாட்டில் நக்சல் ஆதிக்கம் 12 மாவட்டங்களாக இருந்த நிலையில், தற்போது அது ஆறாக குறைந்துள்ளது.
சத்தீஸ்கரில் பிஜப்பூர், காங்கர், நாராயண்பூர், சுக்மா மாவட்டங்களும், ஜார்க்கண்டின் மேற்கு சிங்க்பும், மஹாராஷ்டிராவின் கட்சிரோலி ஆகிய ஆறு மாவட்டங்களில் நக்சல் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையை அடுத்து, ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நக்சல் அமைப்பின் கூட்டுக்குழுக்கள், அமைதி பேச்சு நடத்த கடந்த ஏப்ரல் மாதம் முதல் அழைப்பு விடுத்து வருகின்றன.
ஆனால், இக்குழுக்களுடன் பேச்சு நடத்த அரசு தரப்பினருக்கு சிக்கல் உள்ளது.
இதற்கு காரணம், நக்சல் அமைப்பு என்பது மாநில வாரியாகவோ, ஒட்டுமொத்த அமைப்புக்கோ தலைமை ஏற்று நடத்துவோர் இல்லை; மாறாக, ஒவ்வொரு பகுதி வாரியாக தனித்தனி தலைவர்கள் உருவாகி, அவர்கள் தலைமையின் கீழ் குழுக்களாக நக்சல் இயக்கம் இயங்கி வருகிறது.
நடவடிக்கை
வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு அந்தந்த மாநில அமைப்பினர் அல்லது அரசியல் கட்சியினருடன் பேச்சு நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், நக்சல் இயக்கத்தில் அத்தகைய நிலைப்பாட்டை எடுக்க முடியாத சூழல் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, தங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பிரதான கோரிக்கைகளை நக்சல் அமைப்பினர் அரசிடம் இதுவரை முன்வைத்தது இல்லை. இதன் காரணமாக, இருதரப்புக்கும் இடையே அமைதி பேச்சு நடத்த முடியாத சூழல் உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -