21ல் குமாரசாமிக்கு ஆப்பரேஷன் தேர்தல் பிரசாரம் செய்வாரா?
21ல் குமாரசாமிக்கு ஆப்பரேஷன் தேர்தல் பிரசாரம் செய்வாரா?
ADDED : மார் 14, 2024 04:22 AM
ஹாசன், : வரும் 21ல் அறுவை சிகிச்சை நடப்பதால், லோக்சபா தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி ஈடுபட மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஹாசனில் தொண்டர்கள் ஆலோனை கூட்டத்தில், நேற்று குமாரசாமி பேசியதாவது:
எனக்கு மார்ச் 21ல், ஆப்பரேஷன் நடக்கவுள்ளது. அமெரிக்காவில் இருந்து டாக்டர் வருகிறார். ஆப்பரேஷன் முடிந்த பின், சில நாட்கள் ஓய்வு பெறுவேன். அதன்பின் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்வேன்.
நான் அவ்வளவு விரைவில் இறக்க மாட்டேன். கடவுள் எனக்கு நீண்ட ஆயுளை கொடுத்துள்ளார். பிரஜ்வல், ரேவண்ணாவின் மகன் அல்ல; என் மகன். அவரை வெற்றி பெற வைத்து, ம.ஜ.த.,வை காப்பாற்றுங்கள். பிரஜ்வல் வெற்றிக்காக உழையுங்கள்.
ரேவண்ணாவின் வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னால், நான் எதுவுமே இல்லை. அவர் சிறிது முன்கோபி; திட்டுவார். அதை மனதில் வைக்காதீர்கள். மன்னித்து விடுங்கள். எங்களிடம் தவறு இருக்கலாம். திருத்திக்கொள்ள வாய்ப்பு தாருங்கள். மக்கள் மன்னிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.
ம.ஜ.த.,வை ஒழிக்க முற்பட்டுள்ளனர். தயவு செய்து கட்சியை காப்பாற்றித் தாருங்கள். என்னிடம் டன் கணக்கில் பணம் இல்லை. நான் சொத்து சம்பாதிக்கவில்லை. உங்களை போன்ற லட்சக்கணக்கான மக்களை சம்பாதித்துள்ளேன்.
எனக்கும், ரேவண்ணாவுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. நான் குடும்பம் உடைய விடமாட்டேன். கடினமான முடிவு செய்து, ஸ்வரூப்புக்கு சீட் கொடுத்தேன். இம்முறை நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். மாண்டியாவில் போட்டியிடும்படி, தொண்டர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். கோலார், சிக்கபல்லாபூர், துமகூரில் களமிறங்கும்படி கூறுகின்றனர்.
தேவகவுடாவை தோற்கடித்தீர்கள். ஆனால் ஹாசனை அவர் மறக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் இந்த மாவட்டத்தை மறக்கமாட்டார். அவரது மகன் ரேவண்ணாவும், பல பணிகளை செய்துள்ளார். கோவில், சாலைகள் என, பல இடங்களில் அவரது பணிகள் கண்ணுக்கு தெரிகின்றன.
மாண்டியாவில், கடந்த முறை சுயேச்சை வேட்பாளரின் வெற்றிக்கு, காங்கிரஸ் தொண்டர்களே காரணம் என, முதல்வர் சித்தராமையா கூறியது உண்மைதான். மூன்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், மாண்டியாவில் என் மகனால் வெற்றி பெற முடியவில்லை.
இவ்வாறு அவர்கூறினார்.
வரும் 21ல் அறுவை சிகிச்சை நடப்பதால், லோக்சபா தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி ஈடுபடுவது சந்தேகமென தகவல் வெளியாகி உள்ளது. டாக்டர்களின் ஆலோசனைபடி அவர் குடும்பத்தினர் முடிவெடுப்பர் என்று தெரிகிறது.

