ADDED : பிப் 08, 2024 05:27 AM

பெங்களூரு: வறட்சி காரணமாக, மாநிலத்தில் உணவு தானியங்கள் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே கேழ்வரகு, மக்காச்சோளம், கடலைக்காய், துவரம் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கர்நாடகாவில் 2023ல், மழைக்காலத்தில் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை. 200க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டன. தண்ணீர் பற்றாக்குறையால், விளைச்சல் பாழாகின. விவசாயிகள் இரண்டு முறை விதைத்தும், எதிர்பார்த்த அளவில் பலனளிக்கவில்லை.
கர்நாடகாவில், 2023ம் ஆண்டு 148.16 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விளைவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 92.87 மெட்ரிக் தானியங்கள் அறுவடையானது. 40 சதவீதத்துக்கும் அதிகமான உணவு தானியங்கள் விளைச்சல் குறைந்துள்ளது.
மழைப் பற்றாக்குறையால், அணைகளில் தண்ணீர் நிரம்பவில்லை. எனவே அணை நீர்ப்பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளில், விவசாயிகள் நெல் பயிரிடவில்லை.
எனவே அரிசி உற்பத்தி குறையும் வாய்ப்புள்ளது. அரிசி மட்டுமின்றி, மக்காச்சோளம், கடலைக்காய், கேழ்வரகு, துவரம் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விளைச்சல் குறைந்ததால், வரும் நாட்களில் விலை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

