இந்தியாவில் குவாட் அமைப்பு மாநாடு நடக்குமா: அமெரிக்கா வரி விதிப்பால் சந்தேகம்
இந்தியாவில் குவாட் அமைப்பு மாநாடு நடக்குமா: அமெரிக்கா வரி விதிப்பால் சந்தேகம்
UPDATED : ஆக 07, 2025 10:47 PM
ADDED : ஆக 07, 2025 10:42 PM

புதுடில்லி: வரிவிதிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குவாட் அமைப்பு மாநாடு இந்தாண்டு நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தாண்டு மாநாடு டில்லியில் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா , அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ‛குவாட்' அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த செப்டம்பரில் இந்த அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டன் மாகாணத்தின் டெல்வாரே நகரில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தாண்டு மாநாடு செப்டம்பர் மாதம் டில்லியில் நடைபெற வேண்டியுள்ளது.
டிரம்ப் சீண்டல்
இத்தகைய சூழ்நிலையில்தான் வரி விதிப்பு தொடர்பாக, இந்தியாவை அமெரிக்கா அதிபர் டிரம்ப் சீண்டி வருகிறார்.இந்திய பொருட்களின் மீது முதலில் 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்த டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி 25 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்படி பைடன் நிர்வாகம் ஊக்குவித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.
இச்சூழ்நிலையில், பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவத்துக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக சீனா செல்ல உள்ளது கவனம் பெற்றுள்ளது.
முயற்சி
இந்தோ பசுபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டது தான் குவாட் அமைப்பு.தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக அந்த அமைப்பின் கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செப்டம்பரில் நடக்கும் எனக்கூறப்பட்டாலும், அதற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் குவாட் தலைவர்கள் சந்திப்பை நடத்துவது என அதிகாரிகள் என முயன்று வருகின்றனர்.
இது தொடர்பாக சில ஆஸ்திரேலிய அதிகாரிகள் சிலர் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக குவாட் அமைப்பின் கூட்டம் நடப்பது சந்தேகமாக உள்ளது. சொந்த மண்ணில் டிரம்ப்பை வரவேற்பதில் மோடிக்கு தயக்கம் ஏற்படலாம் என்பதால், இக்கூட்டம் ரத்தாக அதிக வாய்ப்பு உள்ளதாக எங்களிடம் தெரிவித்துள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிட்னி பல்கலையை சேர்ந்தவரும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தில் இடம்பெற்றவருமான மைக் கிரீன் கூறுகையில், குவாட் அமைப்பின் தலைவர்கள் சந்திப்பு நடப்பது சந்தேகமே. இதனை நடக்க வைக்க பலர் முயற்சி செய்தாலும், தற்போதைய சூழ்நிலையில் சாத்தியம் இல்லை என்றார்.