காங்கிரசுக்கு 'கை' கொடுக்குமா பாரம்பரிய கம்பாலா போட்டி?
காங்கிரசுக்கு 'கை' கொடுக்குமா பாரம்பரிய கம்பாலா போட்டி?
ADDED : பிப் 20, 2024 11:35 PM

கர்நாடகா கடலோர மாவட்ட பாரம்பரிய விளையாட்டான, கம்பாலாவை பெங்களூரில் நடத்தியதன் மூலம், இம்முறை தட்சிண கன்னடாவை கைப்பற்ற காங்கிரஸ் திட்டம் வகுத்து உள்ளது.
லோக்சபா தேர்தலில் மங்களூரு லோக்சபா தொகுதியில், கடந்த 1957 முதல் 1989 வரை எட்டு முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் 1991 முதல் 2004 முதல் நடந்த ஐந்து தேர்தலில் பா.ஜ., வென்றது.
கடந்த 2008ல் தொகுதி மறுசீரமைக்கப்பட்டு, தட்சிண கன்னடா தொகுதியாக மாறியது. அதன்பின்னர் நடந்த மூன்று தேர்தல்களிலும் பா.ஜ., வென்று உள்ளது. இதன்மூலம் தட்சிண கன்னடாவை, பா.ஜ., தங்கள் கோட்டையாக மாற்றியது.
பா.ஜ., - எம்.பி.,
இந்த தொகுதியின் தற்போதைய பா.ஜ., - எம்.பி., நளின்குமார் கட்டீல். மாநில தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் உடையவர். மீண்டும் போட்டியிட, அவர் தயாராகி வருகிறார்.
தட்சிண கன்னடா தொகுதிக்கு உட்பட்டு, பெல்தங்கடி, மூடுபித்ரி, மங்களூரு வடக்கு, மங்களூரு தெற்கு, மங்களூரு, பன்ட்வால், புத்துார், சுள்ளியா என எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மங்களூரு, புத்துார் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்; மற்ற ஆறு தொகுதி எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ.,வினர். இதனால் இம்முறையும் பா.ஜ., எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் பா.ஜ.,வில், 'சீட்'டுக்காக, கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. வரும் தேர்தலில் நளின்குமார் கட்டீலுக்கு சீட் கொடுக்க, கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஹிந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனை பயன்படுத்தி கொண்டு, அங்கு வெற்றி பெற காங்கிரஸ் திட்டம் வைத்து உள்ளது.
ஆள் இல்லை
உண்மையை சொல்ல போனால், காங்கிரஸ் சார்பில் போட்டியிட, தட்சிண கன்னடாவுக்கு சரியான வேட்பாளர் இல்லை. கடந்த தேர்தலில் இளைஞர் காங்கிரசின் மிதுன்ராய் போட்டியிட்டு 2.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இம்முறையும் அவர் சீட் கேட்கிறார். அவருக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.
சமீபத்தில் மங்களூரில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர், ராமரை பற்றி அவதுாறாக பேசியது விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இதனை பயன்படுத்தி ஓட்டுகளை கவர, பா.ஜ., திட்டம் வகுத்து உள்ளது. இதனால் இம்முறையும் தட்சிண கன்னடாவில், காங்கிரஸ் தகிடுதத்தம் போட போவது உறுதி.
ஆனாலும், எப்படியாவது தட்சிண கன்னடாவை கைப்பற்ற வேண்டும் என்று, துணை முதல்வர் சிவகுமார் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் பாரம்பரிய விளையாட்டாக, கம்பாலா போட்டி உள்ளது. புத்துார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக்குமார் ராய், கம்பாலா போட்டியை பெங்களூரில் நடத்தி கவனத்தை ஈர்த்தார். இப்போட்டியை மையமாக வைத்து, ஓட்டு கேட்கவும், காங்கிரஸ் திட்டம் வகுத்து உள்ளது.

