அமெரிக்க அதிபர் டிரம்பின் தோல்வி இந்தியாவுக்கு பலன் அளிக்குமா? : இடைக்கால தேர்தலில் பாடம் புகட்டிய மக்கள்
அமெரிக்க அதிபர் டிரம்பின் தோல்வி இந்தியாவுக்கு பலன் அளிக்குமா? : இடைக்கால தேர்தலில் பாடம் புகட்டிய மக்கள்
UPDATED : நவ 08, 2026 02:42 AM
ADDED : நவ 08, 2026 02:38 AM

-- சிறப்பு நிருபர் -
அமெரிக்க இடைக்கால தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியடைந்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் கை ஓங்கியுள்ள நிலையில், இந்த மாற்றம் டிரம்பின் அடாவடித்தனமான கொள்கை முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. குறிப்பாக, நம் நாட்டின் மீதான வரி விதிப்பு, 'எச் - 1 பி' விசா கெடுபிடிகள் போன்றவை செயல் இழக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் கடந்தாண்டு பதவியேற்றபோது, அவரது குடியரசுக் கட்சி பார்லிமென்டின் இரு சபைகளிலும் பெரும்பான்மை பலம் கொண்டிருந்தது. இதனால், அவர் நினைத்த சட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடிந்தது. ஆனால், அங்கு தற்போது நடந்துள்ள இடைக்கால தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டையும் டிரம்பின் குடியரசு கட்சியிடம் இருந்து ஜனநாயக கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அமெரிக்க இடைத்தேர்தல் வரலாற்றிலேயே ஆளுங்கட்சிக்கு இது மோசமான படுதோல்வியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து வெளியுறவு கொள்கைகளில் நிறைய மாற்றங்களை அவர் மேற்கொண்டார்.
ரஷ்யா மீதான பகையை தீர்த்துக் கொள்ள, அந்நாட்டிடம் இருந்து எரிபொருள் வாங்கும் நம் நாட்டுக்கு 100 சதவீத வரியை விதித்து மிரட்டினார்.
புதிய திட்டம்
அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களை விரட்டி அடிக்கும் வகையில், 'எச் - 1 பி' விசா கொள்கைகளிலும் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். இதனால், சொந்த குடியரசு கட்சியினரே அவர் மீது கொந்தளிப்பில் இருந்தனர்.
அதிபரின் இரண்டு ஆண்டு ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் வகையிலான இந்த இடைத்தேர்தலில், மொத்த ஆவேசத்தையும் மக்களும், சொந்த கட்சியினரும் காட்டினர். அதன் விளைவாகவே டிரம்ப் மிகப் பெரிய சரிவை தற்போது சந்தித்துள்ளார். இதனால், பார்லிமென்டில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் பலம் பெருகி இருக்கிறது.
எனவே, பார்லிமென்ட்டில் ஜனநாயக கட்சி கொண்டு வரும் மசோதாக்களை தடுக்க அதிபர் டிரம்ப் தன் சிறப்பு அதிகாரமான, 'வீட்டோ' மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், தானாக புதிய திட்டங்களை நிறைவேற்ற முடியாது. பார்லி., நிலைக்குழுக்கள் எதிர்க்கட்சி வசம் செல்வதால், டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுகள் மற்றும் ஈரானுடனான போர் நடவடிக்கைகள் மீது கடுமையான விசாரணைகள் தொடங்கப்படலாம்.
'மேலும், டிரம்ப் அரசிற்கு பிடிக்காத அல்லது அவரது கொள்கைகளுக்கு எதிரான சட்டங்களை ஜனநாயக கட்சி பார்லி.,யில் நிறைவேற்ற முயற்சிக்கலாம். எனினும் தன், 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி அந்த சட்டங்களை அவர் தடுத்து நிறுத்த முடியும். அதே சமயம், அமெரிக்க அரசியல் சாசனம், அதிபருக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கவில்லை.
அதிபர் ஒரு மசோதாவிற்கு, 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தினால், அதை தடுக்க, 'வீட்டோ ஓவர்ரைடு' என்ற அதிகாரத்தை பார்லி., வழங்கி உள்ளது. இதன் வாயிலாக, டிரம்பின் முயற்சிகளை எதிர்க்கட்சிகள் முறியடிக்க முயற்சிக்கலாம். தற்போதைய சூழலில் பார்லி.,யில் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது.
எச்சரிக்கை
எனினும், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தேவையான மூன்றில் இரு பங்கு என்ற சிறப்பு பெரும்பான்மை இல்லை. இதனால், ஜனநாயக கட்சியால், அதிபர் டிரம்பின், 'வீட்டோ' அதிகாரத்தை அவ்வளவு சுலபமாக முறியடிக்க முடியாது. அதே சமயம், டிரம்பாலும் புதிய திட்டங்களை பார்லி.,யில் நிறைவேற்ற முடியாது.
இதன் காரணமாக அமெரிக்க அரசியலில் தற்போது ஒருவிதமான முடக்கம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக கட்சி வெற்றி பெற்று இருந்தாலும், அமெரிக்காவில் இரு கட்சிகளுமே பொருளாதார தேசியவாதம், உள்நாட்டு உற்பத்தி மற்றும் உள்நாட்டு வினியோக தொடருக்கு தான் முக்கியத்துவம் அளிக்கும். எனவே, நம் நாட்டுக்கு எதிராக டிரம்ப் கொண்டு வந்த வர்த்தக கொள்கைகள் ஒரே நாளில், தலைகீழாக மாறும் என எதிர்பார்க்க முடியாது.
எதிர்க்கட்சிகளின் கை ஓங்கியதால், பார்லி.,யில் அதிபர் டிரம்ப் முன்பை போல செயல்பட முடியாது. எனினும், வெளியுறவு கொள்கைகளில், அதிபருக்கான அதிகாரங்களை நிச்சயம் அவர் பயன்படுத்த முயல்வார். அடுத்தாக வரவிருக்கும், 2028 அதிபர் தேர்தலுக்கான முதன்மை சுற்றுகள் தொடங்கவுள்ளதால், அமெரிக்காவுக்கு அவசர வர்த்தக வெற்றிகள் தேவைப்படுகின்றன. இந்தச் சூழலை இந்தியா சாதகமாக பயன்படுத்த வேண்டும்.
இது குறித்து, ஜி.டி.ஆர்.ஐ.,'எனப்படும், உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
சீனா, ரஷ்யா, ஈரான் விவகாரங்களில் வெளியுறவு கொள்கைகளில், பின்னடைவை சந்தித்துள்ள டிரம்பிற்கு பொருளாதார வெற்றியை நிரூபிக்க இந்தியாவோடு உடனடியாக வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்துவிடாமல், உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு, நம் நாட்டின் ஆற்றல் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழலை கவனிக்கும்போது, நீண்டகால வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு நலன்களை பாதுகாக்க இந்தியா தந்திரமாக செயல்படுவது அவசியம்.
தாக்கங்கள் என்னென்ன?
அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றின் விபரம்:
வரித் தளர்வு மற்றும் பின்னடைவு: முன்னதாக அதிபர் டிரம்ப் 18 சதவீத பரஸ்பர வரி விதிப்பை அறிவித்திருந்தார். ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக அடிப்படை வரி 10% ஆகக் குறைந்துள்ளது.
!எச் - 1 பி' விசா மற்றும் இந்தியப் பணியாளர்கள்: 'எச் - 1 பி' விசா விண்ணப்பங்களுக்கு, 94.50 லட்சம் ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தையும், அமெரிக்கப் பணியாளர்களை நீக்கும் நிறுவனங்கள் மீதான டிரம்பின் கடுமையான அறிவிப்புகளையும், ஜனநாயகக் கட்சி நிச்சயம் எதிர்க்கும். எனினும், அவை உடனடியாக ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ராணுவ கொள்கைகள்: ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் போருக்கான நிதியுதவிகள் மற்றும் ராணுவச் செலவினங்களைக் கட்டுப்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
