எங்கள் தலைவரிடம் சோதனை செய்வீர்களா? உத்தவிற்கு ஆதரவாக கொந்தளித்த சிவசனோ கட்சியினர்
எங்கள் தலைவரிடம் சோதனை செய்வீர்களா? உத்தவிற்கு ஆதரவாக கொந்தளித்த சிவசனோ கட்சியினர்
UPDATED : நவ 12, 2024 09:21 PM
ADDED : நவ 12, 2024 09:16 PM

மும்பை: தேர்தல் பிரசாரத்திற்கு உத்தவ் தாக்கரே வந்த ஹெலிகாப்டர் மற்றும் அவரது உடைமைகளை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதற்கு அவரது கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ.,20 ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பா.ஜ.,- தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ' மஹாயுதி' கூட்டணி ஆட்சிக்கும், எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ' மஹா விகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
நேற்று( நவ.,11) யவத்மால் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த உத்தவ் தாக்கரேயின் ஹெலிகாப்டர் மற்றும் அவரது பையை பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதனை வீடியோவாக பதிவு செய்த அவர், அதிகாரிகளிடம், நீங்கள் உங்களது கடமைகளை செய்கிறீர்கள். நான் எனது கடமையை செய்கிறேன். எனது பையை சோதனை செய்தது போல், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் பைகளை சோதனை செய்தீர்களா என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு உத்தவ் மகன் ஆதித்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், உத்தவ் பிரசாரத்தை முடக்கும் வகையில் இந்த சோதனையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு உள்ளது. மஹாராஷ்டிராவிற்கு பிரசாரத்திற்கு வரும் பிரதமர் மோடியை மற்றும் அமைச்சர்களிடம் சோதனை நடத்தாதது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தார். சிவசேனா கட்சியினரும் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். சரத்பவார் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்து இருந்தனர்.
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: சட்டசபை தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் உரிய முறையில் கடைபிடிக்கப்படுகிறது எனக்கூறியுள்ளனர்.