கெம்பே கவுடா விமான நிலையத்துக்கு விங்ஸ் இந்தியா விருது 2024
கெம்பே கவுடா விமான நிலையத்துக்கு விங்ஸ் இந்தியா விருது 2024
ADDED : ஜன 21, 2024 12:32 AM

பெங்களூரு : 'ஆண்டின் சிறந்த விமான நிலையம்' என்ற விங்ஸ் இந்தியா விருதை, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையமும் மங்களூரு விமான நிலையமும் வென்றுள்ளன.
மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறையுடன் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு இணைந்து, நான்காம் ஆண்டு விங்ஸ் இந்தியா 2024 விமான போக்குவரத்து கண்காட்சியை ஹைதராபாத்தில் நடத்தி வருகிறது.
கடந்த 18ம் தேதி துவங்கி, இன்று நிறைவு பெறும் இந்த கண்காட்சியில் 200 நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக சிறந்த விமான நிலையங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு ஆண்டின் சிறந்த விமான நிலையத்துக்கான விங்ஸ் இந்தியா 2024 விருது கிடைத்தது.
50 லட்சத்துக்கும் குறைவான பயணியரை கையாளும் விமான நிலையங்கள் பிரிவில் இந்த விருது மங்களூரு விமான நிலையத்துக்கு கிடைத்தது. சம்பந்தப்பட்ட விமான நிலைய நிர்வாகங்களுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதுகுறித்து, தன்னுடைய 'எக்ஸ்' பக்கத்தில் பெங்களூரு விமான நிலையம் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆண்டின் சிறந்த விமான நிலையம் விருது நம் விமான நிலையத்துக்கு கிடைத்திருக்கிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
'எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பயணியர், பங்குதாரர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

