குளிர்கால கூட்டத்தொடர் அமைச்சர் பரமேஸ்வர் 'அலெர்ட்'
குளிர்கால கூட்டத்தொடர் அமைச்சர் பரமேஸ்வர் 'அலெர்ட்'
ADDED : டிச 05, 2024 07:22 AM

பெங்களூரு: “பெலகாவியின் சுவர்ண விதான் சவுதாவில், சட்ட சபை குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்கவுள்ளது. அப்போது எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, போலீஸ் அதிகாரிகளுக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உத்தரவிட்டார்.
பெலகாவி சுவர்ண விதான்சவுதாவில் நடக்கவுள்ள, குளிர்காலக் கூட்டம் தொடர்பாக, அமைச்சர் பரமேஸ்வர், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அவர் பேசியதாவது:
சட்டசபை கூட்டத்தில் சிறிய அசம்பாவிதங்கள் கூட நடக்கக் கூடாது. ஏற்கனவே உள்துறை மீது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. கேலரி பாஸ், சுவர்ண விதான்சவுதாவுக்கு வருவோரை கண்காணிக்க வேண்டும். எந்த குளறுபடியும் நடக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் ஆஜராக வேண்டும். கடந்த குளிர்காலக் கூட்டத்தில், பெண்ணின் மீது தாக்குதல் நடந்தது குறித்து, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கும் எதிர்க்கட்சியினர், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்ததாக, அரசின் மீது குற்றம்சாட்டுவர். இதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது.
சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்க, அனைத்து தகவல்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.