இந்திய - சீன எல்லையில் படைகளை திரும்ப பெறும் நடவடிக்கை முடிந்தது: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
இந்திய - சீன எல்லையில் படைகளை திரும்ப பெறும் நடவடிக்கை முடிந்தது: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
ADDED : நவ 01, 2024 04:47 AM

இடாநகர் : ''இந்தியா - சீனா இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டதை அடுத்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ஒரு சில இடங்களில் இருதரப்பு படைகளை திரும்ப பெறும் நடவடிக்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது,'' என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில், நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான, மறைந்த சர்தார் வல்லபபாய் படேல் சிலை மற்றும் மேஜர் ராலெங்னாவ் காட்டிங் அருங்காட்சியகத்தை திறந்து வைக்க நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வந்தார். அருணாச்சலில் வானிலை மிக மோசமாக இருந்ததால், அவரால் விமானத்தில் தவாங் வரை பயணம் செய்ய முடியவில்லை.
எனவே, அசாமின் தேஜ்புரில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சில இடங்கள் குறித்து இந்தியா - சீனா இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளை களைய ராணுவம் மற்றும் துாதரக மட்டத்தில் பேச்சு நடத்தப்பட்டன. இதன் பலனாக, ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் ரோந்து பணிகளை இருதரப்பும் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. அப்பகுதியில் படைகளை திரும்பப் பெறவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. அந்த பணிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன.
தவாங் பகுதியை இந்தியாவுடன் இணைப்பதற்கு காரணமாக இருந்த மேஜர் ராலெங்னாவ் காட்டிங் நினைவை போற்றும் விதமாக அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. நம் ராணுவத்தில், சஹஸ்த்ர சீமா பல், நாகாலாந்து ஆயுதப்படை போலீஸ், நாகா ரெஜிமென்ட் துவங்க காரணமாக இருந்தவர் மேஜர் ராலெங்னாவ்.
இவ்வாறு அவர் பேசினார்.
அருணாச்சல் கவர்னர் கே.டி.பர்நாயக், முதல்வர் பேமா காண்டு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

