காதலின்றி மண்ணில் உயிர்கள் இல்லை மனதில் உயிர் இல்லை காதலில் வென்றவர்களின் கதை கேட்போமா
காதலின்றி மண்ணில் உயிர்கள் இல்லை மனதில் உயிர் இல்லை காதலில் வென்றவர்களின் கதை கேட்போமா
UPDATED : பிப் 14, 2024 02:12 AM
ADDED : பிப் 14, 2024 01:35 AM

காதல்... மனித மனங்களை கனிவோடும், கருணையோடும் கட்டிக்காக்கும் மனதின் கண்டுபிடிப்பு. இந்த காதல்... கற்பனைகளை வளர்க்கும்; கவலையையும் தரும். மகிழ்ச்சியை மலர வைக்கும்; வாழ்வை கொண்டாட வைக்கும். வைராக்கியத்தை தரும்; வெற்றியை வசமாக்கும்.இந்த காதலின்றி மண்ணில் உயிர்கள் இல்லை; மனதில் உயிர் இல்லை.
உலகில் தோன்றிய 'முதல் காதல்' முதல் இந்த வினாடி காதல் வரை, வென்றிடத்தான் அரும்புகிறது. அப்படி காதலில் வென்றவர்களை, கல்யாணம் கண்டு அன்பை கொண்டாடுபவர்களை கண்டு கொண்டு
அவர்களிடம் காதல் கதை கேட்டால் என்ன... காதல் தம்பதியினர் சொல்கிறார்கள்...
நீ தானா... அந்த குயில்
'புற அழகை பார்த்து காதல் வரும். குணத்தையும் அன்பையும் பார்த்து காதல் வருவது அதிசயமான விஷயம். அந்த அதிசயம் எங்கள் வாழ்விலும் நடந்தது' என்கின்றனர் மதுரையை சேர்ந்த ஆனந்த் பாபு, காமாட்சி தம்பதியினர்.
ஆனந்த் பாபு கூறியது: காமாட்சி தையல் வேலையுடன் ஜவுளிக்கடை வைத்திருக்கிறார். நான் தனியார் பள்ளி ஆசிரியர். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக காமாட்சி அடிக்கடி வந்து செல்வார். அவர் வரும்போது நான் மாணவிகளிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறை, பேச்சு ஆகியவற்றை கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறார். ஒரு முறை கூட என்னிடம் பேசியது இல்லை.
கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அவரும் சீருடை வழங்க வரவில்லை. கொரோனா முடிந்து பள்ளி துவங்கிய போது சீருடை கொடுக்க வந்தார். நான் படியில் இருந்து இறங்கி வந்த போது எதிரே வந்து முதல்முறையாக என்னிடம் பேசினார். அவரது முதல் கேள்வியே, ' சார் உங்களுக்கு எத்தனை பசங்க' என்றுதான். 'இன்னும் திருமணம் ஆகவில்லை' என்றதும் 'நல்ல பெண்ணாக பார்த்து சொல்லட்டுமா' என்றார். சரி என்றதும் அலைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டோம். மூன்றாம் நாளில், ' நீங்கள் தான் அந்த பெண்ணா' என்று கேட்டேன். ஆமாம் என்றார்.
ஒரு வயது வரை நன்றாக இருந்து போலியோவால் பாதிக்கப்பட்டவன் நான். இந்த நிலையில் காமாட்சி என்னை ஆறாண்டுகளாக காதலித்தாள் என்று சொல்லும் போது வானத்தில் பறப்பது போல இருந்தது. இருவருக்குமே பெற்றோர் இல்லை, உறவு வழியில் சகோதர சகோதரிகள் இருந்தனர். அனைவரது சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்தோம். ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எதை பார்த்து என்னை விரும்பினாய் என்று கேட்டேன். 'உங்கள் நல்ல மனசை பார்த்து' என்றார். இதற்காகத்தான் இவ்வளவு ஆண்டுகள்
நான் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தேனோ என்று எனக்குத் தோன்றியது.
'உண்மை அன்பு இருந்தால் காதலில் வெற்றி பெறலாம்' என்கின்றனர்
ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன், சினேகா தம்பதியினர். சரவணன் கூறியதாவது: முதன் முதலில் எனது காதலியை ஒரு கடையில் பார்த்தேன். பிளஸ் 2 வரை படித்துள்ளார். நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். மூன்றாண்டுகள் காதலித்த பின்பு எங்களது திருமணம் 2023 ல் நடந்தது. காதலி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். எனது வீட்டில் பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர். எனது பெற்றோர், நண்பர்கள் சூழ கோயிலில் திருமணம் நடந்தது.
மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறோம். காதலித்த போது இருந்த மகிழ்ச்சியை விட திருமணம் முடிந்த பிறகும் அதிக மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன். அதற்கான காரணம்
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துள்ளோம்.
காதலித்தால் மட்டும் போதாது. அதில் உறுதியாக இருவரும் இருக்க வேண்டும். உண்மையான அன்பு இருந்தால் காதலில் வெற்றி
பெறலாம்.
கண்ணாலே பேசி... கைகூடிய காதல்
'பஸ் ஸ்டாப்பில் நின்று கண்களால் பல மாதங்கள் பேசிக்கொண்டோம். நேரடியாக காதலை சொல்லவில்லை' என்று காதல் அனுபவம் சொல்கின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் இளமனுாரை சேர்ந்த அசோக்குமார், நிவேதா தம்பதியினர்.
அசோக்குமார் கூறியதாவது:மனைவி சிவகங்கையை சேர்ந்தவர். நான் அங்குள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்த போது அவர் மற்றொரு கல்லுாரியில் லேப் டெக்னிசியன் படித்தார்.
வேறு வேறு ஜாதி என்பதால் எங்களது திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நண்பர்கள் உதவியுடன் 2018ல் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். எனது வீட்டார் என்னுடன் பேசுவது இல்லை. மனைவியின் குடும்பத்தினர் மட்டும் பேசுகின்றனர். தற்போது ஒரு மகன், மகள் உள்ளனர்.
என் காதலி குடும்பத்தலைவியாகவும், நான் வேன் டிரைவராகவும் பணிபுரிகிறேன். மகிழ்ச்சியாக வாழ்கிறோம். காதல் செய்வது தவறு இல்லை. ஆனால் முடிந்தவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வதே நல்லது.
சாதிக்க வைக்கும் காதல்
'உண்மைக் காதல் சாதிக்க வைக்கும். இன்பத்திலும், துன்பத்திலும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருந்தால் அந்த காதல் வெல்லும்' என்கின்றனர் மதுரையை சேர்ந்த ராமநாதனும், கல்யாணியும்.
ராமநாதன் கூறியது: மனைவி மகாராஷ்டிராவை சேர்ந்தவர். புனேயில் பி.இ., படிக்கும் போது 2002ல் காதல் ஏற்பட்டது.நான் தான் காதலை வெளிப்படுத்தினேன். உடனே சம்மதமும் கிடைத்தது. ஒருத்தரை ஒருத்தர் நன்றாக புரிந்துகொண்டோம். காதல், எங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கானதாக அமைந்தது. படிக்கும் போது 'யுனிவர்சிட்டி பர்ஸ்ட் ஆக வா. உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்' என காதலி சொன்னார். அதேபோல் 'பர்ஸ்ட்' ஆக வந்தேன். கல்யாணம் கை
கூடியது.அவருக்கு தமிழ் தெரியவில்லை. எப்படி தமிழக மருமகளாக இருக்க போகிறார் என அவரின் பெற்றோர் கொஞ்சம் தயங்கினர். எங்கள் வீட்டிற்கு வந்து பார்த்தவுடன் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். ஒன்பது ஆண்டுகள் காதலித்த பின்பு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தோம். உண்மைக் காதல் வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். வெற்றியை தரும்.
நாடு கடந்தாலும்காதல் குறையவில்லை
'இருவரும் 15 ஆண்டுகளாக காதலித்தோம். எங்கள் காதல் பள்ளிப்பருவத்திலே துவங்கியது. ஆனால் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லை' என்று பெருமிதம் கொள்கின்றனர்
திண்டுக்கலை சேர்ந்த நவீன், கிறிஸ்டி.நவீன் கூறியது: கல்லுாரி படிப்பின் போது எங்கள் காதலை சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. உடனே காதலை எங்களுக்குள் பரிமாறினோம். வீட்டிலும் தெரிவித்தோம். இருவரின் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. ஆனாலும் நாங்கள் கடைசி வரை எடுத்த முடிவில் திடமாக இருந்து பெற்றோர் சம்மதத்தில் காதல் திருமணம் செய்தோம். தற்போது அவர்கள் வாழ்த்தும் அளவிற்கு வாழ்க்கையை நடத்தி வருகிறோம். எங்களுக்கு 2 குழந்தைகள். காட்டில் பெண் சிங்கம் வேட்டைக்கு செல்லும் போது ஆண் சிங்கம் வீட்டிலிருந்து குழந்தைகளை பார்த்து கொள்ளும். அதேபோல் வெளிநாட்டில் மனைவி செவிலியராக பணியிலும் , நான் உள்ளூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வீட்டில் குழந்தைகளையும் வளர்க்கிறேன். நாடு கடந்து நாங்கள் இருந்தாலும் எங்கள் காதலின் அளவு கொஞ்சம் கூட குறையவில்லை.
காவியமாக தெரிகிறது காதல் கல்யாணம்
'நாங்கள் சந்தித்த முதல் நாளே காதல் அரும்பியது. பள்ளி பருவத்தில் தொடங்கிய காதல், காலங்கள் செல்ல செல்ல கற்பாறையில் எழுதிய காவியம் போல் மாறிவிட்டது' என்கின்றனர் பழநியை சேர்ந்த ராஜ்வினோத், பிரியா தம்பதியினர்.
அவர்கள் கூறியது:கல்லுாரி முடித்து பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருந்தோம். இருவரும் வேலைக்குச் சென்று அவரவர் குடும்பத்தைப் பார்த்து வந்தோம். 2020ல் பெற்றோரின் சம்மத்தோடு திருமணம் செய்து கொண்டோம். இன்றோடு எங்களின் காதல் பயணம் தொடங்கி 13 ஆண்டுகளை எட்டி விட்டது.
பல சண்டைகள், சமாதானங்கள், வருத்தங்கள் என வந்தாலும் ஒருபோதும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததில்லை, சந்தேகப்பட்டுக் கொண்டதில்லை. தனித்துவமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் எந்தவித ஒளிவுமறைவும் எங்களுக்குள் இல்லை. காதலிக்கும் போதும் சரி திருமணத்திற்கு பிறகும் சரி தற்போதுவரை அந்த வெளிப்படைத்தன்மை இருப்பதுதான் எங்களுக்குள்ளான அன்பின் ஊற்று. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதாலும் காதல் கல்யாணம், காவியமாக தெரிகிறது. எங்களுக்கென ஒரு வாரிசுடன் அடுத்த தலைமுறை வந்துவிட்டது.
-
காதலுக்கு மரியாதை
'காதல் திருமணம் செய்து கொள்வதன் மூலம் இருவருக்கும் இடையில் ஆரோக்கியமான புரிதல் உருவாகும். நாங்கள் இருவரும் 8 ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம்,' என்கின்றனர் சிவகங்கை மாவட்டம்
மேலமருங்கூரை சேர்ந்த நிருபன் சக்கரவர்த்தி,யாமினி. நிருபன் சக்கரவர்த்தி கூறியது:இருவரும் ஒரே கல்லுாரியில் படித்தோம். அப்போதும் சரி இப்போதும் சரி பரஸ்பர மரியாதையுடன் நல்ல புரிதலோடு காதலிக்கிறோம். பெற்றோரின் முழு சம்மதத்தோடு தான் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தோம். இருவரது வீட்டிலும் பேசினோம். யாமினி வீட்டில் இருவரும் படித்து முடிக்க வேண்டும். மாப்பிள்ளை கண்டிப்பாக படிப்போடு நல்ல வேலை பார்த்தால் தான் திருமணம் என்று கூறி விட்டனர்.
யாமினிக்காகவே ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு சென்றேன். தற்போது ஆஸ்திரேலியா அரசு உதவியுடன் நீர் மேலாண்மை மற்றும் விவசாயத்தில் முனைவர் பட்டம் படித்து வருகிறேன். யாமினிக்காக நான் முயற்சி செய்தது அவர்கள் பெற்றோருக்கு பிடித்தது; ஆகையால்
திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். காதலாக வாழ்க்கை பயணத்தை துவக்கினோம். நல்ல புரிதலோடு காதல் திருமணம் செய்தால் வாழ்க்கை அழகாக இருக்கும்.
உண்மை காதலுக்கு தடை இல்லை
'இருவேறு சமூகத்தை சேர்ந்த நாங்கள் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தோம்; சந்தோஷமாக வாழ்கிறோம். உண்மைக்காதலுக்கு ஏதும் தடையாகாது' என்கின்றனர் தேனியை சேர்ந்த வழக்கறிஞர்கள் திவாகர், அனு.
அனு கூறியதாவது: நானும், கணவர் திவாகரும் கல்லுாரி இறுதி கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றோம். அப்போது முதல் முறையாக சந்தித்தோம். இருவரும் ஒரே மாவட்டம் என்பதால் இயல்பாக பழகினோம். படிப்பு முடிந்து தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நான் வழக்கறிஞர் பணியை தொடர்ந்தேன். அப்போது திவாகர் காதலை கூறிய போது 'பிடித்திருந்தால் என் காதலை ஏற்றுக்கொள்' என்றார். அதற்கு நான் பதில் கூறவில்லை. அதற்கு பின்பும் நண்பர்களாக இருந்தோம். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் திவாகர் சட்ட அலுவலகத்தில் பயிற்சியில் சேர்ந்தேன். அவர் தொழில் ரீதியாக உதவி செய்தார். இது என்னை ஈர்த்ததால் அவரை காதலித்தேன். அதன் பின் பெற்றோரிடம் அனுமதி கோரினேன். சம்மதிக்காததால் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்தோம். திவாகர் மீது நான் கொண்ட துாய அன்பின் அடையாளமாக எங்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.
மனஉறுதியோடு காதல்
'இரு குடும்பத்திலும் எழுந்த கடும் எதிர்ப்பை தாண்டி இருவரின் மன உறுதியால் காதல் திருமணம் செய்து கொண்டோம். இருவரின் பரஸ்பர புரிதலே காதல் வாழ்க்கைக்கு வெற்றி தந்துள்ளது' என்கின்றனர் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த ஜானி ரால்ஸ்டன், ஜெசிலா ஏஞ்சலின் தம்பதியினர்.
ஜானி ரால்ஸ்டன் கூறியது:பல்வேறு தடைகளைத் தாண்டி, என்ன வந்தாலும் சமாளிக்கலாம் என்ற இருவரின் மன உறுதியால் காதல் திருமணம் செய்தோம். பின்னர் பெற்றோர் எங்களை அரவணைத்துக் கொண்டனர். எனது மனைவியின் சரியான புரிதலும், நம்பிக்கையும், காதலும் என்னை வெற்றியடைய செய்துள்ளது.
கல்லுாரியில் துவங்கிய காதல் என்னுடைய மனைவி கொடுத்த தைரியம் நம்பிக்கையால் இன்று எம். பி.ஏ., பி.எச்.டி. முடித்து வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இருவருக்கும் இடையே உள்ள பரஸ்பர புரிதலும், துாய்மையான உள்ளத்தாலும் காதல் வாழ்க்கை வெற்றிகரமாக நடந்து
வருகிறது. எங்கள் பெற்றோருக்கு மன நிறைவை ஏற்படுத்தி உள்ளது.
-

