சிறுமி கடத்தல் வழக்கில் பெண் எட்டு ஆண்டுகளுக்கு பின் கைது
சிறுமி கடத்தல் வழக்கில் பெண் எட்டு ஆண்டுகளுக்கு பின் கைது
ADDED : மே 08, 2025 10:59 PM
பரத்லால்: 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்குப் பின் கட்டாய திருமணம் செய்து வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த 28 வயது பெண்ணை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2017 நவம்பர் 1ம் தேதி, பரத்லால் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 15 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கிஷன் பால், தினேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், உத்தர பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் அடைத்து வைக்கப்பட்டு, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், பின், சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதும் தெரிய வந்தது.
கிஷன் பால் மனைவியை போலீசார் தேடி வந்தனர். 2019 ஜூலையில் அவரை தேடப்படும் குற்றவாளியாக போக்சோ நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், உ.பி.,யின் சம்பல் மாவட்டத்தில் கிஷன் பால் மனைவி தலைமறைவாக பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரை கைது செய்தனர்.
போலீசாருக்கு பயந்து, பொய்யான பெயரில் அவர் அங்கு வசித்து வந்தது, விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.