ADDED : ஜூன் 13, 2025 08:35 PM
புதுடில்லி,:வேலை பார்த்த வீட்டில் திருடிய பெண், நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்தார். அவரை, உத்தராகண்ட் மாநிலத்தில் டில்லி போலீசார் பிடித்து, பொருள், நகைகளை மீட்டனர்.
டில்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில் வசிப்பவர் கரம்ஜித் கவுர். இவரின் வீட்டில், உத்தராகண்ட் நகரை சேர்ந்த ரூபி என்ற பெண், வீட்டு வேலை பார்த்து வந்தார். கடந்த 10ம் தேதி, கரம்ஜித் கவுரின் அறையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வைர மூக்குத்தி, தங்க மோதிரங்கள், கம்மல்கள், வளையல்கள், செயின்கள் மற்றும் வெள்ளி பொருட்களுடன் ரூபி மாயமானார்.
அவரை பிடித்து, பொருட்களை பறிமுதல் செய்யுமாறு, கிருஷ்ணாநகர் போலீசில், கரம்ஜித் கவுர் புகார் கொடுத்தார். சி.சி.டி.வி., காட்சிகளின் படி, 23 வயதான அந்த பெண், உத்தராகண்ட் மாநிலத்தில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன் படி, உத்தராகண்ட் மாநிலத்தின் பண்டாரிபாக் பகுதியில் பதுங்கியிருந்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் மறைத்து வைத்திருந்த, 80 ஆயிரம் ரூபாய் மற்றும் சில தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர்.
கைதான அந்த பெண்ணிடம் விசாரித்த போது, வீட்டு வேலை பார்த்த கரம்ஜித் கவுரை, பக்குவமாக அறையிலிருந்து வெளியேற்றி, பணம், நகையுடன் அந்த பெண் மாயமானார் என்பது தெரிந்தது. போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.