எஸ்.பி., அலுவலகத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
எஸ்.பி., அலுவலகத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
ADDED : ஜன 09, 2025 06:29 AM
தங்கவயல்: தங்கவயல் போலீஸ் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
தேவரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா 30. இவரின் நிலத்தில் பசுக்களை வளர்த்து வந்தார். இவரின் நிலத்தை விட்டு வெளியேறுமாறு, அதே கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத், சங்கரப்பா, பாபு ஆகியோர் அடிக்கடி சுதா மற்றும் இவரின் தாய்க்கும் தொல்லை கொடுப்பதாக போலீசில் சுதா புகார் அளித்தார்.
ஆனால் இவர்களின் புகாரை போலீசார் ஏற்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 11ம் தேதி தன்னை மஞ்சுநாத் உள்ளிட்ட மூவரும் தாக்கி கொடுமைப்படுத்தியதாக போலீசில் சுதா புகார் அளித்துள்ளார். அப்போதும் போலீசார் அலட்சியப்படுத்தியுள்ளனர்.
இதனால் தங்கவயல் சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள எஸ்.பி., அலுவலகம் வந்த சுதா, அங்கு விஷம் குடித்தார். நிலைமையை அறிந்த போலீசார், அவரை மீட்டு உடனடியாக ராபர்ட்சன் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின் தீவிர சிகிச்சைக்காக கோலார் எஸ்.என்.ஆர்., அரசு மாவட்ட மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

