பயண முகவரால் ஏமாற்றப்பட்ட பெண் 22 ஆண்டுக்கு பின் தாயகம் திரும்பினார்
பயண முகவரால் ஏமாற்றப்பட்ட பெண் 22 ஆண்டுக்கு பின் தாயகம் திரும்பினார்
ADDED : டிச 18, 2024 12:46 AM

புதுடில்லி,:பயண முகவரால் ஏமாற்றப்பட்டதை அடுத்து, 22 ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசித்து வந்த இந்திய பெண், நேற்று தாய் நாட்டிற்கு திரும்பினார்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த ஹமிதா பானு என்ற பெண்ணை, 2002ல், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகருக்கு, பயண முகவர் அழைத்துச் சென்றார்.
அங்கு அவரை விட்டு விட்டு, பயண முகவர் தப்பி ஓடி வந்து விட்டார். அங்கு ஒரு வீட்டில் ஹமிதா பானு வேலை செய்து வந்தார். கராச்சியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்தார்.
கணவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து, வளர்ப்பு மகனுடன், ஹமிதா பானு வசித்து வந்தார்.
பயண முகவரால் ஹமிதா பானு ஏமாற்றப்பட்ட தகவலை, 2022ல், கராச்சியைச் சேர்ந்த, 'யு டியூபர்' வலியுல்லா மரூப் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
இந்த வீடியோவை நம் நாட்டில் இருந்த ஹமிதா பானுவின் குடும்பத்தினர் பார்த்தனர். ஹமிதா பானுவிடம், அவரது மகள் யாஸ்மீன் மொபைல் போனில் பேசி வந்தார்.
அவரை, நம் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை குடும்பத்தினர் எடுத்தனர்.
இந்நிலையில், கராச்சியில் இருந்து லாகூருக்கு விமானத்தில் வந்த ஹமிதா பானு, இந்தியா - பாக்., எல்லையான வாகா வழியாக, தாய் நாட்டுக்கு நேற்று திரும்பினார். அவரை, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் வரவேற்றனர்.