ADDED : அக் 09, 2025 03:17 AM
புதுடில்லி:வீட்டின் மொட்டை மாடியில் இருந்து விழுந்த இளம்பெண் உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொரு பெண், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மத்திய டில்லி ஹவுஸ்காஸ் ஹக்கீம் பக்காவில் வசித்தவர் சுனிதா,21. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் திரிப்தி என்ற குங்குன்,19. இருவரும் நெருங்கிய தோழிகள். தினமும் இரவு மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பர்.
நேற்று முன் தினமும் வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தனர். இரவு 8:40 மணிக்கு மாடியின் சுவரில் அமர்ந்திருந்த இருவரும் தவறி விழுந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சுனிதா, அதே இடத்தில் உயிரிழந்தார்.
பலத்த காயம் அடைந்த திரிப்தி, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஹவுஸ்காஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுனிதா உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பரிதாபமாக உயிரிழந்த சுனிதாவுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
மருத்துவமனையில் சுயநினைவு திரும்பிய பின், போலீசாரிடம் திரிப்தி நேற்று அளித்த வாக்குமூலத்தில், “இருவரும் மொட்டை மாடி சுவரில் அமர்ந்து இருந்தோம். திடீரென நிலை தடுமாறி ஒருவரை ஒருவர் பிடித்தபோது இருவருமே விழுந்தோம்,” என, கூறியுள்ளார்.
திரிப்தியின் குடும்பத்தைச் சேர்ந்த ஜல் நாராயண் துபே கூறுகையில், “இருவரும் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். நானும் சிறிது நேரம் அங்கே இருந்தேன்.
''நான் கீழே இறங்கும்போது இருவரையும் சீக்கிரம் வருமாறு கூறினேன். என்னைத் தொடர்ந்து இறங்கி வருவர் என நினைத்தேன். ஆனால் இது ஒரு விபத்துதான்,” என்றார்.