பெலகாவி பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண் இறப்பு
பெலகாவி பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண் இறப்பு
ADDED : பிப் 03, 2025 04:53 AM
பெலகாவி; பெலகாவியின் பிம்ஸ் மருத்துவமனையில், குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்தார். இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன், பல்லாரி அரசு மருத்துவமனையில் இரண்டு வாரம் இடைவெளியில், குழந்தை பெற்ற ஐந்து பெண்கள் அடுத்தடுத்து இறந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போன்று, பெலகாவி, ராய்ச்சூர், துமகூரு உட்பட, பல இடங்களில் அரசு மருத்துவமனைகளில், குழந்தை பெற்ற பெண்கள் இறந்தனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு செல்லவே, கர்ப்பிணியர் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெலகாவி அரசு மருத்துவமனையில், மற்றொரு பெண் இறந்தார். பெலகாவியின், கரடிகுத்தி கிராமத்தில் வசிப்பவர் கங்கவ்வா கொடகுந்த்ரி, 31. கர்ப்பிணியாக இருந்த இவர், ஜனவரி 28ம் தேதி, பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 30ம் தேதி பிரசவம் நடந்தது.
அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு, மோசமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். நேற்று முன் தினம் கங்கவ்வா உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரிடம், வெற்று காகிதத்தில் கையெழுத்து பெற்று கொண்டு, உடலை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கங்கவ்வாவின் தம்பி சங்கரப்பா கூறுகையில், ''என் அக்காவின் உடல் நிலை, மோசமாக இருந்த போதே, டாக்டர்கள் சிகிச்சை அளித்திருந்தால், உயிர் பிழைத்திருப்பார். ஆனால் டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததே, அக்காவின் இறப்புக்கு காரணம்,'' என்றார்.