காலாவதியான மருந்தால் பெண் பலி: மேற்கு வங்க அரசு பதிலளிக்க உத்தரவு
காலாவதியான மருந்தால் பெண் பலி: மேற்கு வங்க அரசு பதிலளிக்க உத்தரவு
ADDED : ஜன 17, 2025 03:44 AM

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், காலாவதியான ஐ.வி., மருந்து செலுத்தப்பட்டதில் பெண் பலியான நிலையில், அது குறித்து விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய அம்மாநில தலைமைச் செயலருக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள மிட்னாபூரில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு அனுமதிக்கப்பட்டு, குழந்தை பிரசவித்த பெண்களுக்கு, கடந்த 9ம் தேதி ஐ.வி., வழியாக மருந்து செலுத்தப்பட்டது. இதில், ஐந்து பேரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களில், முந்தைய நாள் குழந்தை பிரசவித்த, 31 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். எஞ்சிய நான்கு பேரும் மேல் சிகிச்சைக்காக கோல்கட்டா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காலாவதியான மருந்து செலுத்தப்பட்டதே பெண் பலியாக காரணம் என கூறப்பட்டது. இறந்த பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்ததை அடுத்து, இது குறித்து விசாரிக்க 13 பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது.
இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் புயலை கிளப்பிய நிலையில், 'இந்த வழக்கை போலீசார் விசாரிக்கக் கூடாது; சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறி இரண்டு பொதுநல மனுக்கள் கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'காலாவதியான மருந்து சப்ளை செய்த நிறுவனத்திற்கு மேற்கு வங்க மருந்துக் கட்டுப்பாட்டாளரின் உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி, கடந்த ஆண்டு டிச., 10ல், நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அதில், மறு உத்தரவு வரும் வரை உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட்டிருந்தனர். ஆனால், மாநில சுகாதார துறை இந்த உத்தரவை சரியாக பின்பற்றவில்லை. இதுவே பெண் இறப்புக்கு காரணம். காலாவதியான மருந்து செலுத்தப்பட்ட பிற நோயாளிகளும் பாதிப்புக்குள்ளாகலாம் என்பதால், அவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்' என, வலியுறுத்தினார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்படுவதாவது:
கடந்த ஆண்டே சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்துக்கு எதிராக உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அது செயல்படுத்தப்படாதது அதிருப்தி அளிக்கிறது. ஒரு உயிர் போன பின்பே, அந்த மருந்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் நடந்த உண்மை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி முழு அறிக்கையை, அடுத்த விசாரணையின் போது மேற்கு வங்க தலைமைச் செயலர் தாக்கல் செய்ய வேண்டும். காலாவதியான மருந்தை வழங்கிய நிறுவனத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டது.