போதையில் கார் ஓட்டி விபத்து பெண் பலி; 8 பேர் படுகாயம்
போதையில் கார் ஓட்டி விபத்து பெண் பலி; 8 பேர் படுகாயம்
ADDED : ஜன 16, 2025 06:31 AM
உத்தர கன்னடா: கார்வாரில் அய்யப்ப பக்தர்கள் கூட்டத்தில், வேகமாக வந்த கார் மோதியதில், 21 வயது இளம் பெண் உயிரிழந்தார். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். குடிபோதையில் கார் ஓட்டிய ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரின் சித்தாபுரா நகரின் ரவீந்திரா சதுக்கம் அருகில் அய்யப்ப சுவாமி கோவில் உள்ளது. மகர ஜோதியை ஒட்டி, நேற்று முன்தினம் மாலையில் அய்யப்பன் கோவிலுக்கு, பக்தர்கள் பெருமளவில் வந்திருந்தனர்.
திடீரென வேகமாக வந்த, 'ஈகோ ஸ்போர்ட்ஸ்' கார் ஒன்று, பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில், காவலகொப்பாவை சேர்ந்த தீபா ராமகொண்டா, 21, என்ற இளம் பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
அதிர்ச்சியடைந்த அங்கிருந்தோர், கார் மீது கற்களை வீசி தாக்கினர். காரில் இருந்த ரோஷன் பெர்னாண்டஸ், அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தார். ஆனால் பக்தர்கள் அவரை பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தனர்.
கார் மோதியதில் படுகாயமடைந்த பெண்கள் உட்பட எட்டு பேரை மீட்டு சித்தாபுரா தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில், ஆபத்தான நிலையில் உள்ள கல்பனா நாயக், 5, என்ற குழந்தை, மற்றொரு பெண் உட்பட இருவர் ஷிவமொக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த சித்தாபுரா போலீசார் அங்கு சென்றனர். பொது மக்களிடம் அடி வாங்கிக் கொண்டிருந்த ரோஷன் பெர்னாண்டசை கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

