ADDED : டிச 06, 2024 12:55 AM
ஹைதராபாத், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் புஷ்பா - 2: தி ரூல் திரைப்படத்தை பார்க்க மகனுடன் வந்த பெண், தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்; மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.
நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் புஷ்பா - 2: தி ரூல் எனும் திரைப்படம் நேற்று நாடு முழுதும் பல்வேறு மொழிகளில் வெளியானது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் ஒரு தியேட்டரில் நேற்று முன்தினம் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
ரசிகர்களுடன் படத்தை பார்க்க, படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்திருந்தார். அவரை காண தியேட்டரில் கூட்டம் முண்டியடித்தது.
இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. தியேட்டருக்கு கணவன், மகன் என குடும்பத்துடன் வந்திருந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மயங்கினார்.
அவரது மகன் காயமடைந்தார். போலீசார் இருவரையும் மீட்டு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்தார்; அவரது மகன் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.