ADDED : ஜன 26, 2025 06:22 AM

பரிதாபாத்: ஹரியானாவில் கைக்குழந்தையுடன் மொபைல் போனில் பேசியபடி வந்த பெண், சாலையில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து விபத்தில் சிக்கினார்.
ஹரியானா மாநிலம், பரிதாபாதைச் சேர்ந்த இளம்பெண். இவர் தன் 1 வயது கைக்குழந்தையுடன் சமீபத்தில் அங்கு உள்ள கடைத்தெரு வழியாக நடந்து சென்றார்.
அப்பகுதி சாலையில் பாதாள சாக்கடை செல்கிறது. அதில், அடைப்புகளை நீக்க வைக்கப்பட்டுள்ள பள்ளம் மூடியின்றி இருந்தது.
அதற்குள் ஆட்கள் விழுந்து விபத்தில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக, கடைக்காரர் ஒருவர் விளம்பர தட்டியை வைத்து வழியை மறைத்திருந்தார்.
இந்நிலையில் மொபைல் போனில் பேசியபடி அத்தெரு வழியாக சென்ற பெண், பாதாள சாக்கடை திறந்திருப்பதை கவனிக்காமல் அதில் கால் இடறி உள்ளே விழுந்தார்.
இதை பார்த்த அங்கிருந்த ஒருவர் ஓடி வந்து, பாதாள சாக்கடைக்குள் இறங்கி கைக்குழந்தையையும், பெண்ணையும் பத்திரமாக மீட்டார்.
இந்த விபத்தில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. எனவே, அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோவை பார்த்தவர்கள், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் சிலர் சாலையில் செல்லும் போது மொபைல் போனில் கவனத்தை சிதற விடக்கூடாது என கூறியுள்ளனர்.

