ADDED : ஜன 26, 2025 10:59 PM

இன்றைய காலகட்டத்தில் வெளியில் சென்று வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கும் பெண்கள், வீட்டில் இருந்தபடி சுயதொழில் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
கேக் செய்வது, பிஸ்கட் தயாரிப்பது உள்ளிட்ட தொழில்களை செய்து அசத்தி வருகின்றனர். இவர்களில் ஒருவரை பற்றி பார்க்கலாம். துமகூரின் குப்பி தாலுகா ஹகலவாடி கிராமத்தை சேர்ந்தவர் கங்கலட்சுமம்மா. இவர், தனது வீட்டில் காளான் சாகுபடி செய்து விற்பனை செய்கிறார்.
இது குறித்து கங்கலட்சுமம்மா கூறியதாவது:
நானும், எனது கணவரும் முன்பு பெங்களூரில் வசித்தோம். கணவர் ஓலா நிறுவனத்தில் வாடகை கார் ஓட்டினார். நான் வீட்டில் இருந்தபடி காளான் தயாரித்து விற்பனை செய்தேன்.
ஆனால், என் கணவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்து விட்டோம். இங்கு முதலில் காய்கறி சாகுபடி செய்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால் பெங்களூரில் இருந்த போது காளான் சாகுபடி செய்தது போல இங்கேயும் செய்யலாம் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.
வீட்டிலேயே காளான் தயாரிக்க ஆரம்பித்தேன். தற்போது தினமும் 7 முதல் 8 கிலோ காளான் விற்பனை செய்து வருகிறேன். ஒரு கிலோ காளான் 250 ரூபாய். மாதம் 250 கிலோ காளான் விற்பனை செய்து வருகிறேன்.
இந்த தொழில் செய்வதற்கு அதிக வேலை ஆட்கள் தேவையில்லை. நானும், எனது கணவரும் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் சேர்ந்து காளான் உற்பத்தி செய்து வருகிறோம். தற்போது தன்னிறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். பெண்கள் நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை. வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க முடியவில்லை என்று கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருந்தும் சுயதொழில் செய்து சம்பாதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்
-- நமது நிருபர் --.