UPDATED : செப் 27, 2011 01:33 AM
ADDED : செப் 27, 2011 12:57 AM
புதுடில்லி : ராம்லீலா மைதானத்தில் குரு ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்த போது, போலீஸ் நடத்திய தாக்குதலில் முதுகுதண்டில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று மரணமடைந்தார்.
'வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க கோரி, கடந்த ஜூன் 4ல், டில்லி, ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் யோகா குரு பாபா ராம்தேவ். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இவருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்களை போலீசார் நள்ளிரவில் அடித்து விரட்டினர். இந்த தாக்குதலில் ராஜ்பாலா, 51, என்ற பெண்ணுக்கு கழுத்தில் இருந்து முதுகு தண்டிற்கு செல்லும் எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
வலியால் துடித்த அவரை ஜி.பி.பாண்ட் மருத்துவமனையின் நரம்பு சிகிச்சை துறையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்தார்.
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில்,'மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்தே ராஜ்பாலா ஆபத்தான நிலையில் தான் இருந்தார். அவரது கழுத்தில் இருந்து, முதுகு தண்டிற்கு செல்லும் எலும்பில் பலத்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பக்கவாத பாதிப்பு ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. கொடுக்கப்பட்ட மருந்துகளின் உதவியால், அவரது உடல்நிலையை மேம்படுத்த முயற்சி செய்து வந்தோம்' என்றனர்.