ADDED : பிப் 12, 2025 01:43 AM

மூணாறு,:இடுக்கி மாவட்டம் பெருவந்தானம் ஊராட்சியில் குளிக்க சென்ற ஷோபியா 45, காட்டு யானை தாக்கி இறந்தார்.இடுக்கி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா பகுதியான பாஞ்சாலிமேட்டிற்கு கீழ் மலையோர பகுதியில் பெருவந்தானம் ஊராட்சிக்கு உட்பட்ட மதம்பா, கொம்பன்பாறை உள்ளது.
அங்கு காட்டு யானை நடமாட்டம் அதிகம் என்பதால் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் ஒரு சில குடும்பத்தினர் மட்டும் வசிக்கின்றனர்.அங்கு இஸ்மாயில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரது மனைவி ஷோபியா நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு வீட்டில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள ஓடையில் குளிக்கச் சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் சந்தேகம் அடைந்த மகன் ஷேக்முகம்மது தாயாரை தேடிச் சென்ற போது ஓடையில் ஷோபியா பிணமாக கிடந்தார். அப்பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் காட்டு யானை நின்றதால், அது தாக்கி ஷோபியா இறந்தது தெரியவந்தது.
இப்பிரச்னையில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க அதிகாரிகள் முன் வராததை கண்டித்து ஷோபியாவின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால் அதிகாலை1:00 மணி வரை உடலை கொண்டு செல்ல முடியவில்லை. இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி, கோட்டயம் வனத்துறை அதிகாரி ராஜேஷ் அங்கு சென்று பேசினர்.
அதில் ஷோபியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும்.
குடும்பத்தில் ஒருவருக்கு பணி தொடர்பாக அரசிடம் பரிந்துரைக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார். அதன்பிறகு உடலை கொண்டு செல்ல அனுமதித்தனர்.

