தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் முயற்சி 25 ஆண்டுக்கு பின் மீட்கப்பட்ட பெண்
தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் முயற்சி 25 ஆண்டுக்கு பின் மீட்கப்பட்ட பெண்
ADDED : டிச 24, 2024 06:38 AM

பல்லாரியில் 25 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண், சமூக நலத்துறை முதன்மைச் செயலர் மணிவண்ணன் முயற்சியால், மீண்டும் குடும்பத்தினருடன் சேர உள்ளார்.
பல்லாரியைச் சேர்ந்தவர் சாக்கம்மா, 50. இவருக்கு திருமணமாகி, விக்ரம், போதராஜ் ஆகிய இரு மகன்களும், லட்சுமி என, ஒரு மகளும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், 25 ஆண்டுகளுக்கு முன்பு, பல்லாரியில் இருந்து ஏதோ ஒரு ரயிலில் ஏறி சென்று விட்டார்.
உறவினர்கள் பல இடங்களில் தேடினர். போலீசிலும் புகார் அளித்தனர். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்தத் தகவலும் இல்லை. இறந்திருக்கலாம் என்று நினைத்து, அவருக்கு ஆண்டுதோறும் காணாமல் போன தினத்தன்று 'திதி' கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், மாண்டியாவை சேர்ந்த ரவிநந்தன், ஐ.பி.எஸ்., அதிகாரியாக உள்ளார். அங்குள்ள அகதிகள் முகாமில், சாக்கம்மா குறித்த தகவல் அறிந்தார்.
உடனடியாக அவரை வீடியோ எடுத்து, பெங்களூரில் உள்ள தன் நண்பர்களுக்கு அனுப்பினார். ரவிநந்தனின் நண்பர்களில் ஒருவர், இதை தன், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார்.
இந்த பதிவை பார்த்த சமூக நலத்துறை முதன்மை செயலர் மணிவண்ணன், ஐ.பி.எஸ்., அதிகாரி ரவிநந்தனிடம் போனில் பேசினார். அதன்பின், சாக்கம்மாவின் குடும்பத்தினர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அதேவேளையில், மணிவண்ணனின் வழிகாட்டுதலின்படி, ஒரு பெண் உட்பட மூன்று அரசு அதிகாரிகள் குழு, ஹிமாச்சல பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சென்றவுடன், 'வீடியோ கால்' மூலம், சாக்கம்மாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு பின், சாக்கம்மாவை கண்ட மகன்களும், மகளும், கண்ணீர் விட்டு அழுதனர். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சாக்கம்மா பல்லாரி திரும்பி, குடும்பத்தினருடன் சேரவுள்ளார்.
அதிகாரி மணிவண்ணனின் முயற்சிக்கு, குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். இவர், தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. - நமது நிருபர் -