ADDED : ஏப் 24, 2025 01:04 AM

மும்பை நீதிமன்றத்தை அவமதித்து கருத்து தெரிவித்த பெண்ணுக்கு ஒரு வார சிறை தண்டனை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த லீலா வர்மா என்பவர், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், தெருநாய்களுக்கு உணவளித்து வந்தார். இதற்கு குடியிருப்பு நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்களுக்கும், லீலா வர்மாவுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த லீலா வர்மா, மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார்.
அதில், தெருநாய்களுக்கு உணவளிப்பதால், குடியிருப்பு நலச்சங்கத்தினர் தன்னை துன்புறுத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை ஜனவரியில் விசாரித்த உயர் நீதிமன்றம், 'தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக, குடியிருப்பு நலச்சங்கத்தினருக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், அவர்கள் மாநகராட்சியை தான் அணுக வேண்டும். அதை விடுத்து, குடியிருப்பாளரை துன்புறுத்தக் கூடாது' என, உத்தரவிட்டது.
இந்த உத்தரவை விமர்சித்து, குடியிருப்பு நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வினீதா ஸ்ரீநந்தன், மற்ற உறுப்பினர்களுக்கு இ - மெயில் அனுப்பினார். அதில், நீதிமன்றம், 'நாய் மாபியா' போல் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, நீதித்துறையை விமர்சித்ததற்காக வினீதா ஸ்ரீநந்தன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி, அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டதாவது:
நீதிமன்றத்தை, 'நாய் மாபியா' என்று அழைப்பது போன்ற கருத்தை படித்தவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இந்த விவகாரத்தில் வினீதாவின் மன்னிப்பை ஏற்க முடியாது.
அவருக்கு ஒரு வாரம் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அவர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, இந்த உத்தரவு எட்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.