ADDED : டிச 07, 2024 11:13 PM
சிக்கமகளூரு: காதலி தன்னை விட்டுவிட்டு, கணவருடன் சென்றதால் கோபமடைந்து, காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடியவரை போலீசார் தேடுகின்றனர்.
சிக்கமகளூரு என்.ஆர்.புராவின் கிச்சபி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்தி, 22. இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடந்தது. கணவருடன் வசித்த இவருக்கு, முகநுால் மூலம் சிரஞ்சீவி, 26, என்பவர் அறிமுகமானார். இது காதலாக மாறியது. சில மாதங்களுக்கு முன்பு, கணவரை தவிக்கவிட்டு, காதலன் சிரஞ்சீவியுடன் ஓடிவிட்டார்.
இதுகுறித்து, திருப்தியின் குடும்பத்தினர், பாள ஹொன்னுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் விசாரணை நடத்தி, இருவரையும் கண்டுபிடித்து அழைத்து வந்தனர். போலீசார், திருப்திக்கு புத்திமதி கூறி, கணவருடன் அனுப்பினர்.
அதன்பின் தவறை உணர்ந்து, கணவருடன் வாழ்க்கை நடத்தி வந்தார். திருப்தி தன்னை விட்டு, கணவருடன் சென்றதால், சிரஞ்சீவி கோபமடைந்தார். நேற்று காலை திருப்தி தனியாக இருந்தபோது, அவர் வீட்டுக்குள் புகுந்து, கத்தியால் குத்திக் கொலை செய்தார். உடலை அங்கிருந்த குளத்தில் வீசிவிட்டு தப்பியோடினார்.
தகவலறிந்து அங்கு வந்த பாளஹொன்னுார் போலீசார், குளத்தில் இருந்து பெண்ணின் உடலை மீட்டனர். தப்பியோடிய சிரஞ்சீவியை தேடுகின்றனர்.