'பிரிஜ்'ஜில் 30 துண்டுகளாக பெண் உடல்: 15 நாட்களுக்கு பின் அம்பலமான கொலை
'பிரிஜ்'ஜில் 30 துண்டுகளாக பெண் உடல்: 15 நாட்களுக்கு பின் அம்பலமான கொலை
ADDED : செப் 22, 2024 01:00 AM

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு, வையாலி காவலில், வீரண்ணா பவன் அருகில் ஒரு வீடு இரண்டு வாரங்களாக பூட்டி கிடந்தது.
சில நாட்களாக வீட்டுக்குள் இருந்து, துர்நாற்றம் வீசியது. அந்த வீட்டில் வசித்து வந்த மஹாலட்சுமி, 29, என்ற இளம்பெண்ணை மொபைல் போனில் அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டனர்.
அது 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது. இதைஅடுத்து அவரது தாய்க்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர், தன் மூத்த மகளுடன் அங்கு வந்தார். மஹாலட்சுமியின் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார், அங்கு வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் இருந்த பிரிஜ்ஜில் இருந்து துர்நாற்றம் வருவது தெரிந்தது.
அதை திறந்து பார்த்தபோது உள்ளே துண்டு, துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் இருந்தது. அது மஹாலட்சுமி என்பது தெரிய வந்தது. சம்பவ இடத்தை கூடுதல் போலீஸ் கமிஷனர் சதீஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மஹாலட்சுமி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
அவரே மஹாலட்சுமியை கொலை செய்திருக்க வேண்டுமென போலீசார் சந்தேகிக்கின்றனர். 15 நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வட மாநிலத்தைச் சேர்ந்த மஹாலட்சுமி, ஷாப்பிங் மால் ஒன்றில் பணியாற்றினார். அவரது குடும்பத்தினர் பல ஆண்டு களாக பெங்களூரில் வசிக்கின்றனர்.
இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளது. கணவரிடம் இருந்து பிரிந்து, கடந்த ஆறு மாதங்களாக வாடகை வீட்டில், தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் பசவண்ண தேவர மடத்தில் வேலை செய்கிறார்.
விரல் ரேகை நிபுணர்கள், தடயவியல் ஆய்வக வல்லுனர்கள் தடயங்களை சேகரிக்கின்றனர்.
மஹாலட்சுமியை அவருடன் தங்கியிருந்தவர் கொலை செய்தாரா அல்லது அவரது கணவர் கொலை செய்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.