ADDED : ஜன 04, 2024 07:39 AM

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், பசுரத்தே கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தா முரே, 50; அங்கன்வாடி பணியாளர். இவர் தன் குழந்தையுடன் வீட்டுக்கு சென்ற போது, வழியில் உள்ள ஒருவரது வீட்டின் தோட்டத்தில் இருந்த பூக்களை, சுகந்தாவின் குழந்தை பறித்தது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் கல்யாண் முரே, குழந்தையை திட்டியுள்ளார்.
'சாதாரண பூவை பறித்ததற்கு குழந்தையை திட்டுகிறீர்களே' என சுகந்தா கேள்வி கேட்டதற்கு, அவரை திட்டியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது ஆத்திரமடைந்த கல்யாண் முரே, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து, சுகந்தாவின் மூக்கை வெட்டினார்.
இதில், அவர் ரத்தம் வழிய அலறியபடி மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், கல்யாண் முரே தப்பி ஓடி விட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சுகந்தாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பி ஓடிய கல்யாண் முரேயை போலீசார் தேடி வருகின்றனர்.
---
ஈரானில் இரட்டை குண்டுவெடிப்பு 103 பேர் பலி
ஈரானின் முக்கிய படைத் தளபதியாக இருந்த ஜெனரல் குவாசிம் சுலைமானியின், நான்காம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கெர்மான் பகுதியில், 1,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது கூட்டத்துக்குள் ஒரு குண்டு வெடித்தது. 15 நிமிடங்களுக்குப் பின், மற்றொரு குண்டும் வெடித்தது. இதையடுத்து, மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடிப்பு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி, 103 பேர் உயிரிழந்துள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
---
துாத்துக்குடி சி.எஸ்.ஐ., அலுவலகத்தில் மோதல்
துாத்துக்குடி சி.எஸ்.ஐ., திருமண்டல அலுவலகத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
சி.எஸ்.ஐ., தென்னிந்திய திருச்சபை துாத்துக்குடி - -நாசரேத் திருமண்டல அலுவலகம் துாத்துக்குடி கால்டுவெல் பள்ளி வளாகத்தில் உள்ளது. திருமண்டலத்தை நிர்வகிப்பதில் இரு தரப்பாக செயல்படுகின்றனர். அங்கு பொருளாளராக பணியாற்றிய மோகன் என்பவர் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மீண்டும் பணியில் தொடர ஆணை பெற்றதாக கூறி நேற்று திருமண்டல அலுவலகம் வந்தார். அவரது பணியிடத்தில் புதிதாக டேவிட் ராஜன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே அலுவலகத்தில் கைகலப்பு ,மோதல் ஏற்பட்டது. துாத்துக்குடி வடபாகம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
---
துப்பாக்கியால் மிரட்டல்: முன்னாள் ராணுவ வீரர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம், மேல்மங்கலத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சடையாண்டி, 48. கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் தனியார் காஸ் கம்பெனியில் பணிபுரிந்தார். விடுமுறையில் மேல்மங்கலம் வந்திருந்தார்.
இதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மகேந்திரன், மது போதையில் சடையாண்டி வீட்டருகே அவதுாறாக பேசிக் கொண்டிருந்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த சடையாண்டியின் மனைவி செல்வராணி, அதை கண்டித்தார். அப்போது வெளியே வந்த சடையாண்டியை, மகேந்திரன் கையில் வைத்திருந்த லைசென்ஸ் உள்ள கைத்துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். புகார் படி, மகேந்திரனை எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை மற்றும் போலீசார் கைது செய்தனர்.
---
பாரில் ரகளை: தி.மு.க., கவுன்சிலர் கணவர் கைது
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பேரூராட்சி 15 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஆஷா. இவரது கணவர் ராஜா 45. அங்குள்ள டாஸ்மாக் கடையில் இலவசமாக மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டு பாரில் நாற்காலிகளை அடித்து சேதப்படுத்தினார். இது தொடர்பாக கடையில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் வெளியாயின. பணகுடி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
---
'ஹால் டிக்கெட்' வழங்காத தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
சேலம் மாவட்டத்தில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவ -மாணவியருக்கு, ஊரக திறனாய்வு தேர்வு கடந்த, 16ல் நடந்தது. தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 289 மாணவர்கள் தேர்வு எழுத, மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், 38 பேருக்கு தேர்வு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
விடைத்தாள் வழங்க ஆசிரியர் வந்தபோது, அப்பள்ளி மாணவர்கள் வராதது தெரிந்தது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் கபீர் விசாரித்தார். தலைமை ஆசிரியர் சரவண குமார், மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்காததோடு, தேர்வு குறித்து தெரியப்படுத்தாதது தெரிந்தது. இதனால், சரவணக்குமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, கபீர் உத்தரவிட்டார்.
---
தள்ளுபடியில் ஸ்வீட் தராததால் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் தமிழருவி, 55, என்பவர், வாணியம்பாடி பஸ் ஸ்டாண்டில், ஸ்வீட் கடை நடத்துகிறார். 30ம் தேதி இரவு, 11:00 மணிக்கு மூன்று வாலிபர்கள் மாஸ்க் அணிந்து, பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். இதில், கடை நாசமானது. தீயை அணைக்க முயன்ற தொழிலாளி படுகாயமடைந்தார். வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரித்தனர்.
சில நாட்களுக்கு முன், வாணியம்பாடி மில்லத் நகரை சேர்ந்த சதாம், 27, என்பவர், அந்த கடைக்கு சென்று ஸ்வீட் வாங்கி, கூடுதல் தள்ளுபடி தரும்படி கேட்டார். அதற்கு கடை ஊழியர்கள் மறுத்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின், 30ம் தேதி இரவு தன் நண்பர்கள், வாணியம்பாடி கோவிந்தாபுரத்தை சேர்ந்த நர்மதன், 21, மில்லத் நகரை சேர்ந்த முகமது வசீம், 24, ஆகியோருடன் சென்று, கடையில் பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிந்தது. நர்மதன், முகமது வசீம் ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்து, தலைமறைவான சதாமை தேடுகின்றனர்.
---
விபத்தில் கணவர் கொலை: 'பாச' மனைவிக்கு வலை
சென்னை - அயனாவரத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 37, வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடை நடத்தினார். இவருக்கு மனைவி பிரியா, 32, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1ம் தேதி இரவு, வில்லிவாக்கத்தில் இருந்து தன் 'எலக்ட்ரிக்' இருசக்கர வாகனத்தில் சென்ற பிரேம்குமார், அண்ணா நகர் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே, 'ரெனால்ட்' கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, கார் ஓட்டி வந்த அயனாவரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 30, என்பவரை நேற்று முன் தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பிரேம்குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அவரது அக்கா சங்கீதா, அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். பிரேம்குமாரின் மனைவிக்கும், ஹரிகிருஷ்ணனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதனால் தம்பதி இடையே பிரச்னை இருந்ததாகவும், போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, ஹரிகிருஷ்ணனிடம் தீவிரமாக விசாரித்தபோது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி, முக்கிய நபரான பிரேம்குமார் மனைவி பிரியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நண்பர் சரத்குமார் ஆகியோரை போலீசார் தேடுகின்றனர்.