சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம்! : 14, 15ம் தேதிகளுக்கு தேவசம் போர்டு அலெர்ட்
சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம்! : 14, 15ம் தேதிகளுக்கு தேவசம் போர்டு அலெர்ட்
ADDED : ஜன 12, 2024 01:49 AM

பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த தேதிகளில் பெண்கள், குழந்தைகள் வரவேண்டாம் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல - மகர விளக்கு பூஜை காலம் முடிவுக்கு வர உள்ளது.
வரும் 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்க உள்ளது. இப்போதே கோவிலில் பக்தர்கள் வெள்ளம் அலைமோத துவங்கிஉள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், 'ஸ்பாட் புக்கிங்' எனப்படும், கோவிலுக்கு வந்த பின் தரிசனம் மேற்கொள்வதற்கான முன்பதிவு நடைமுறையை, நேற்று முன் தினம் முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிறுத்தி உள்ளது.
மகர விளக்கு பூஜை
அன்றைய தினம் முதல், 'ஆன்லைன்' முன்பதிவு மட்டுமே நடைமுறையில் உள்ளது. மகர விளக்கு பூஜை நாளான, வரும் 15ம் தேதிக்கான தரிசனத்துக்கு, 40,000 பக்தர்களுக்கு மட்டுமே, 'ஆன்லைன்' முன்பதிவு வழங்கப்பட்டு வருகிறது.
அதற்கு அடுத்த நாளான ஜன., 16ல், 50,000 பக்தர்களுக்கும், ஜன., 17 முதல் 20ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 60,000 பக்தர்களுக்கும், 'ஆன்லைன்' முன்பதிவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். இதில், 80,000 பேர், 'ஆன்லைன்' முன்பதிவு முறையில் தரிசனம் மேற்கொள்கின்றனர். இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
''மகர விளக்கு பூஜையின் போது, பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், ஜன., 14 மற்றும் 15ம் தேதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கோவிலுக்கு வரவேண்டாம்,'' என, தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜன., 16 முதல் 20 வரையில், அதிக அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் அன்றைய தினம் அவர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுமதி இல்லை
மகர விளக்கு பூஜை முடிந்த பிறகு, 20ம் தேதி வரை கோவில் திறந்திருக்கும். வரும் 20ம் தேதி இரவு மாளிகைபுரத்தம்மன் சன்னிதியில் குருதி பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
அதற்கு அடுத்த நாள், பந்தள அரச குடும்பத்தினர் அய்யப்பனை தரிசித்த பின், மண்டல - மகர விளக்கு பூஜை காலம் முடிவுக்கு வந்து கோவில் நடை அடைக்கப்படும்.