ADDED : அக் 01, 2024 01:10 AM
போபால்,
மத்திய பிரதேசத்தில், பணம் கேட்டு மிரட்டிய பா.ஜ., கவுன்சிலரை அடித்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், கவுன்சிலரிடம் பா.ஜ., தலைமை விளக்கம் கேட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் போபால் மாநகராட்சியின் 48வது வார்டு கவுன்சிலராக அரவிந்த் வர்மா உள்ளார்.
சமீபத்தில், இவரை பொது இடத்தில் வைத்து, மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் படுகாயமடைந்த அரவிந்த் வர்மா, போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி, பா.ஜ., கவுன்சிலரை தாக்கிய பராஸ் மீனா, அவரது மனைவி மற்றும் தாய் மற்றும் பராசின் உறவுக்கார பெண் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் பராஸ் மீனா தரப்பினர், தங்களிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கவுன்சிலர் அரவிந்த் வர்மா மீது போலீசில் புகார் அளித்தனர். இருதரப்பு புகார்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி அரவிந்த் வர்மாவுக்கு, மாவட்ட பா.ஜ., தலைவர் சுமித் பச்சோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.