'கன்னித்தன்மை சோதனைக்கு பெண்களை கட்டாயப்படுத்த முடியாது'
'கன்னித்தன்மை சோதனைக்கு பெண்களை கட்டாயப்படுத்த முடியாது'
ADDED : ஏப் 01, 2025 12:39 AM

பிலாஸ்புர்: 'கன்னித்தன்மை பரிசோதனை செய்து கொள்ளும்படி ஒரு பெண்ணை கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்தால், அது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல்' என, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்துஉள்ளது.
சத்தீஸ்கரை சேர்ந்த தம்பதி, குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தனர். விசாரணையின் போது, தன் மனைவி வேறொரு நபருடன் கள்ள உறவில் இருப்பதாக கணவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், தன் மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய உத்தரவிடும்படி கோரிக்கை விடுத்தார். இதை குடும்பநல நீதிமன்றம், 2024, அக்டோபரில் நிராகரித்தது.
இதையடுத்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில், கணவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 'என் கணவர் ஆண்மையற்றவர், அதனால் அவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை' என, மனைவி தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி அரவிந்த் குமார் வர்மா பிறப்பித்த உத்தரவு:
என் கணவர் ஆண்மையற்றவர் என மனைவி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மனுதாரர் நிரூபிக்க வேண்டுமானால், அது தொடர்பான மருத்துவ பரிசோதனையை அவர் செய்து நிரூபிக்கலாம் அல்லது வேறு ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்கலாம்.
அதைவிடுத்து, மனைவியின் கன்னித்தன்மையை பரிசோதிக்கும்படி அவர் கோரிக்கை வைக்க முடியாது.
அந்த கோரிக்கை, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21க்கு எதிரானது. நம் அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவு, வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிமனித சுதந்திரம் மட்டுமின்றி, பெண்கள் கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் உறுதி செய்கிறது. எனவே, பெண்களை கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை பரிசோதனை செய்ய முடியாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.