ஆஹா என்னாவொரு முன்னேற்றம்: துணை ராணுவம் வரை வந்த பெண்கள்: ராஜ்நாத் சிங் 'ஹேப்பி!'
ஆஹா என்னாவொரு முன்னேற்றம்: துணை ராணுவம் வரை வந்த பெண்கள்: ராஜ்நாத் சிங் 'ஹேப்பி!'
ADDED : ஆக 30, 2024 02:11 PM

திருவனந்தபுரம்: 'இன்று போலீஸ் மட்டுமின்றி துணை ராணுவப்படைகளிலும் பெண்கள் இணைந்து பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மத்திய அரசு கடுமையான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது. பல மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டன. நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் குற்றங்களை கருத்தில் கொண்டு எத்தனை மாற்றங்கள் இருந்தாலும், இன்னும் நிறைய செய்ய வேண்டும் என தோன்றுகிறது.
மாநில அரசு
கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் பா.ஜ., அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த மாநில அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும். கோல்கட்டா பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் இதயத்தை உலுக்கியது.
தடைகள்
சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. உதாரணமாக, நாட்டின் ஆயுதப் படைகளில் பெண்களின் பங்கு அதிகரித்து வருவதை நீங்கள் காணலாம். இன்று அனைத்து போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஆயுதப் படையில் பெண்கள் நுழைவதில் இருந்த பல தடைகள் நீக்கப்பட்டுள்ளன. முப்படைகளின் மூன்று பிரிவுகளிலும், பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதை உறுதி செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

