ஆந்திராவில் பெண்களுக்கு 'வீட்டிலிருந்தே வேலை' திட்டம்
ஆந்திராவில் பெண்களுக்கு 'வீட்டிலிருந்தே வேலை' திட்டம்
ADDED : பிப் 15, 2025 11:42 PM

அமராவதி: ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையில், பெண்கள் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிப்., 12ல் ஆந்திர பிரதேச தொழில்நுட்ப கொள்கை 4.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது குறித்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
கொரோனா தொற்றின் போது வேலை சூழல் மாறியது. தொழில்நுட்பம் எளிதாகி இருப்பதால், வீட்டிலிருந்தபடி பணியாற்றுவது முக்கியத்துவம் பெற்றது.
அது மட்டுமின்றி ஒரே கூரையின் கீழ் வெவ்வேறு நிறுவனத்தார் பணியாற்றுவது மற்றும் வீட்டுக்கு அருகிலேயே பணியிடங்கள் போன்ற முறைகள் உருவாகின. இது போன்ற வசதிகளால் ஊழியர்களின் உற்பத்தி திறன் மேம்படும்.
இதன்படி, பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், வேலை செய்ய பெண்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய வைப்பதற்கான முயற்சிகள் துவங்கப்பட உள்ளன.
இத்தகைய முயற்சிகள், சிறந்த வேலை - குடும்பம் சமநிலையை அடைய உதவும். ஆந்திராவில் மாற்றத்தை ஏற்படுத்த இந்த முறைகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்ப கொள்கை 4.0 அதில் ஒரு படி.
ஒவ்வொரு நகரம், தாலுகா அளவில் அலுவலக இடங்களை உருவாக்க, நிறுவனங்கள் முன் வர வேண்டும். இதற்காக நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்க உள்ளோம். இது, பரவலாக வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

