ADDED : பிப் 03, 2024 11:01 PM

குடகு: சஞ்சீவினி ஒன்றிய மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 20 பெண்கள் கூட்டாக வேளாண் துறை மூலம் பயிற்சி பெற்று, காளான் வளர்ப்பில் சாதனை படைத்து உள்ளனர்.
குடகு மாவட்ட சஞ்சீவினி ஒன்றிய மகளிர் சுய உதவி குழு தலைவர் பங்கஜா கிரிஷ் கூறியதாவது:
குடகு மாவட்டத்தில் காளான் வளர்ப்பு, வருமான பயிராக உள்ளது. இம்மாவட்டத்தில் முதன் முறையாக, 'ரைதா ஷேத்ரா பாடசாலை' திட்டத்தின் கீழ், பெண்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
செலவில்லாதது
வேளாண் துறையை சேர்ந்த அம்பிகா, மீரா, காவ்யா, மைத்ரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதற்கு எதுவும் செலவு செய்யவில்லை.
சொந்த வயலில் இருந்து நெற்கதிர்களை வந்தோம். வேளாண் துறை சார்பில் காளான் விதைகள் வழங்கப்பட்டன. தற்போது நான்கு கிலோ காளான்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பத்து கிலோ காளான்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெற்கதிர்களை கொதிக்கும் நீரில் வேகவைக்க வேண்டும். பின் நிழலில் உலர்த்த வேண்டும். கையால் தொட்டால் ஈரம் மட்டுமே இருக்க வேண்டும். தண்ணீர் கசிவு இருக்கக்கூடாது. அதாவது 80 சதவீதம் காய்ந்திருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் கவர்
பின், நெற்கதிர்களை இரண்டு அங்குல நீளத்தில் வெட்டி, பிளாஸ்டிக் கவரில் போட வேண்டும். ஒரு கவரில் ஐந்து கிலோ காய்ந்த கதிர்களை சுருள் வடிவில் பரப்பி, காளான் விதை சேர்த்து, அதன் மீது, மற்றொரு அடுக்கு கதிர்களை பரப்பி, மீண்டும் விதையை இட வேண்டும்.
இவ்வாறு நான்கு முறை செய்ய வேண்டும். ஒரு ரப்பர் பேண்ட் உதவியால், பிளாஸடிக் கவரை கட்ட வேண்டும். பின், வெளிச்சம் புகாத அறையில் 21 நாட்கள் வைக்க வேண்டும்.
காளான் வளரும் அறை, சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பூஞ்சை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 21 நாட்களுக்கு பின், காளான் வளர்ந்திருக்கும். ரப்பர் பேண்டை அகற்றி, காளானை எடுக்கலாம்.
தற்போது 75 மூடை காளான் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. ஒரு மூடையிலிருந்து இரண்டு முதல் மூன்று கிலோ எடை உள்ள காளான் கிடைக்கும்.
ஒரு மூடையிலிருந்து காளான் எடுத்த பின், மேலும் இரண்டு முறை காளான் உற்பத்தி செய்யலாம். இக்குழுவில் நான் உட்பட 20 பெண்கள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளோம். பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் காளான் வளர்க்கின்றனர்.
இவ்வாறு அவர்கூறினார்.
� இருட்டு அறையில் வளர்க்கப்படும் காளான்கள்.� காளான் வளர்ப்பில் சாதனை படைத்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள்.