ADDED : அக் 13, 2024 11:11 PM

கர்நாடக தலைநகரான பெங்களூரு இன்று உலக அளவில், அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ஏராளமான ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்கள், ஆயத்த ஆடை உட்பட ஏராளமான தொழிற்சாலைகள் என நகர் முழுதும், தொழில் வளம் கொட்டி கிடக்கிறது.
இதனால் கர்நாடகாவின் மற்ற மாவட்டங்கள், பிற மாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த பெண்களும் வேலைக்காக, பெங்களூரு வருகின்றனர். பி.ஜி., எனும் தங்கும் விடுதிகளில் தங்கி வேலை செய்கின்றனர்.
ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு, நிறுவனங்கள் சார்பில் வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன. ஆனால் மற்ற இடங்களில் வேலை செய்யும் பெண்கள், வாடகை கார், ஆட்டோ, ரேபிடோ பைக்குகளில் வேலை முடிந்து செல்கின்றனர்.
* வாக்குவாதம்
இப்படி செல்லும் போது, சில கார், ஆட்டோ டிரைவர்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் வருகின்றன. கடந்த ஆண்டு ரேபிடோ பைக்கில் பயணம் செய்த பெண்ணை, அதே பைக் ஓட்டுனர் கடத்தி சென்று, பலாத்காரம் செய்த சம்பவம், பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்கள் பாதுகாப்புக்காக பெங்களூரு போலீசார், பல திட்டங்களை கொண்டு வந்தாலும், அவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதை மட்டும் தடுக்க முடியவில்லை. இது ஒருபக்கம் இருக்க, ஆட்டோ, வாடகை கார்களில் முன்பதிவு செய்து பெண்கள் செல்லும் போது, கட்டணம் தொடர்பாக, பெண்களுடன், டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் அடிக்கடி நடக்கிறது.
சமீபத்தில் கூட மாகடி சாலையில், ஒரு இளம்பெண் முன்பதிவு செய்த ஆட்டோவை, கடைசி நேரத்தில் ரத்து செய்தார். இதனால் ஆட்டோ டிரைவருக்கும், பெண்ணுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இளம்பெண்ணை, டிரைவர் ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆட்டோ டிரைவரும் கைது செய்யப்பட்டார்.
* ஆதங்கம்
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே நடந்தது. ஆட்டோ டிரைவர்கள் பெண் பயணியரிடம் முரட்டுதனமாக நடந்து கொள்வதாகவும், கட்டண விஷயத்தில் கறாராக இருப்பதாகவும், பல பெண்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
இதை தவிர்க்கும் வகையில், பெண்கள் எந்தவித பிரச்னையும் இன்றி பயணிக்கும் வகையில், பெங்களூரு நகரில் சில்க் போர்டு, மெஜஸ்டிக், கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா மெட்ரோ ரயில் நிலையம், மடிவாளா, யஷ்வந்த்பூர் ரயில் நிலையம், காந்தி பஜார் உட்பட 25 முக்கிய சந்திப்புகளில், பெண்களுக்கான பிரீபெய்டு ஆட்டோ ஸ்டாண்ட் திறக்க அரசு முடிவு செய்து உள்ளது.
ஏற்கனவே பெங்களூரு சிட்டி ரயில் நிலையம், எஸ்.எம்.வி.டி., ரயில் முனையம் உட்பட நகரின் சில இடங்களில், பிரீபெய்டு ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன.
இந்த ஆட்டோ ஸ்டாண்டுகளுக்கு சென்று, இரண்டு ரூபாய் செலுத்தி டோக்கன் பெற வேண்டும். பின், எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூற வேண்டும். செல்லும் இடத்திற்கு எவ்வளவு கட்டணமோ, அதற்கான பில் ரசீது வழங்கப்படும். ஆட்டோ டிரைவர்கள் கூடுதல் கட்டணம் கேட்க மாட்டார்கள். இதுபோன்று பெண்களுக்கும் பிரீபெய்டு ஆட்டோ ஸ்டாண்ட் துவங்கி, பெண் ஆட்டோ டிரைவர்களை நியமிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது.
இதுபற்றி பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது. நாம் எதிர்பார்த்ததை விட, அரசின் திட்டத்திற்கு அமோக ஆதரவு தெரிவித்து உள்ளனர். எவ்வளவு விரைவில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமோ, அதை செய்தால் நல்லது என்று பலரும் விருப்பம் தெரிவித்தனர்.
சரவெடி கருத்துகள்
------------
* ஒரு வித பயம்
இரவில் ஆட்டோ, வாடகை கார்களில் பயணிக்கும் பெண்களுக்கு, சரியான இடத்திற்கு டிரைவர் அழைத்து சென்று விடுவாரா என்று, மனதிற்குள் ஒரு வித பயம் எப்போதும் இருக்கும். ஆனால் பெண் ஆட்டோ டிரைவர் என்றால், பெண்கள் பயமின்றி பயணம் செய்வர். பிரீபெய்டு ஆட்டோ என்றால், சரியான கட்டணத்தை செலுத்தினால் மட்டும் போதும். கட்டண பிரச்னையும் இருக்காது.
சாரிகா பாரதி, பி.எட்., மாணவி, பிரேசர் டவுன்
=======
பாதுகாப்பாக...
'நம்ம யாத்ரி' நிறுவனத்தின் மூலம், ஆட்டோ ஓட்டி வருகிறேன். பெண்களுக்கான பிரீபெய்டு ஆட்டோ திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று. கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். ஸ்டாண்டிலேயே கட்டணம் செலுத்திவிட்டு, எந்த பிரச்னையும் இன்றி ஆட்டோவில் பயணிக்கலாம். பெண் ஆட்டோ டிரைவர் என்றால், பெண் பயணியர் பாதுகாப்பாக இருப்பது போன்று உணருவர்.
புஷ்பா, ஆட்டோ டிரைவர், 'நம்ம யாத்ரி'
==============
* மனநிலை
சமீபத்தில் கட்டணம் தொடர்பாக, ஒரு பெண்ணை, ஆட்டோ டிரைவர் ஆபாசமாக திட்டிய வீடியோவை பார்த்தேன். இந்த மாதிரியான டிரைவர்கள் இருக்கும் ஆட்டோ, கார்களில் பயணிக்கும் பெண்களின் மனநிலையை நினைத்து பார்க்க வேண்டும். பெண்களுக்கான பிரீபெய்டு ஆட்டோ திட்டத்தை, எவ்வளவு விரைவில் அமல்படுத்த முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொண்டு வர வேண்டும்.
திவ்யா சேஷாத்ரி, சமூக ஆர்வலர், பசவனகுடி
=========
...பாக்ஸ்...
பெண்களுக்கு வரபிரசாதம்
சென்னையில் இருந்து ரயிலில் வந்த, ஒரு பெண் பயணி கூறுகையில், ''பெங்களூரு மாகடி சாலையில் உள்ள, சகோதரர் வீட்டிற்கு வருவேன். சென்னையில் இருந்து பெங்களூரு வர, பொதுப்பெட்டியில் கட்டணமே 150 ரூபாய் தான். ஆனால் அதிகாலையில் ரயில் நிலையத்தில் இருந்து, மாகடி சாலைக்கு செல்ல ஆட்டோ டிரைவர்கள் 300 ரூபாய் கேட்கின்றனர். பெண்களுக்கான பிரீபெய்டு ஆட்டோ திட்டம், மற்ற ஊர்களில் இருந்து வரும் பெண்களுக்கு வரபிரசாதம்,'' என்றார்.
இன்னொரு பெண் பயணி கூறுகையில், ''சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து, காமாட்சிபாளையா பயணிக்க ஆட்டோ டிரைவரிடம் கட்டணம் கேட்டேன். அதிக கட்டணம் கேட்டார்; மீட்டர் போடுங்கள் என்றேன். சிறிது துாரம் சென்றதுமே, மீட்டர் வேகமாக ஓட ஆரம்பித்தது. டிரைவரிடம் கேட்ட போது பதில் சொல்லவில்லை. இதனால் பாதியில் கீழே இறங்கி, பஸ்சில் சென்றேன். அதிக கட்டணத்தை தவிர்க்க, பிரீபெய்டு ஆட்டோ தான் ஒரே வழி,'' என்றார்
- நமது நிருபர் -.