பாக். பிரச்னையில் மத்தியஸ்தம் தேவையில்லை; டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்
பாக். பிரச்னையில் மத்தியஸ்தம் தேவையில்லை; டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்
UPDATED : ஜூன் 18, 2025 12:13 PM
ADDED : ஜூன் 18, 2025 10:30 AM

புதுடில்லி; பாகிஸ்தானுடான பிரச்னைகளில் அமெரிக்காவின் எந்த ஒரு மத்தியஸ்தத்தையும் இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
புதுடில்லியில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் தொலைபேசியில் பேசியதை பகிர்ந்து கொண்டார். மேலும், இருதரப்பினரும் பேசிய விவரங்கள் என்ன என்பதையும் அவர் விரிவாக விளக்கினார்.
அவர் கூறியதாவது;
இந்த முழு பேச்சுவார்த்தையின் (பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப்) போதும், இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மத்தியஸ்தம் குறித்து அமெரிக்காவால் எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று டிரம்பிடம் தெளிவாக கூறினார்.
ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தம் செய்வது தொடர்பான பேச்சு வார்த்தைகள், சம்பந்தப்பட்ட இரு ராணுவங்களுக்கு இடையில் தற்போதுள்ள வழிமுறைகளின் கீழ் இந்தியா, பாகிஸ்தான் இடையே நேரடியாக செயல்படுத்தப்பட்டன. பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளின் பேரில் தான் செய்யப்பட்டது.
இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, இப்போதும் ஏற்றுக் கொள்ளாது. ஒருபோதும் அதை செய்யாது என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் முழுமையான அரசியல் ஒருமித்த கருத்து உள்ளது.
ஜி 7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். அமெரிக்காவுக்கு முன் கூட்டியே டிரம்ப் திரும்ப வேண்டி இருந்ததால் இந்த சந்திப்பு நடக்கவில்லை. அதன் பின்னர், டிரம்பின் வேண்டுகோளின் பேரில் இன்று இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசினர். இருவரும் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் உரையாடினர்.
ஏப்.22ம்தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடியிடம் டிரம்ப் இரங்கல் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான தமது போராட்டத்தின் ஆதரவையும் அவர் தெரிவித்தார்.
அந்த தாக்குதலுக்கு பின்னர் இருவரும் பேசுவது இதுவே முதல் முறை. எனவே, ஆபரேஷன் சிந்தூர் பற்றி பிரதமர் மோடி, டிரம்பிடம் விரிவாக பேசினார்.
இந்தியாவில் நடைபெறும் குவாட் மாநாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடி, டிரம்பிடம் கூறினார். அவரும் வர மிகவும் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இவ்வாறு வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வீடியோவில் கூறி உள்ளார்.