சீட் முடிவாகாமல் ராகுல் யாத்திரையில் பங்கேற்க மாட்டேன்: அகிலேஷ் யாதவ்
சீட் முடிவாகாமல் ராகுல் யாத்திரையில் பங்கேற்க மாட்டேன்: அகிலேஷ் யாதவ்
ADDED : பிப் 19, 2024 03:19 PM

லக்னோ: உத்தர பிரதேசத்தில் தொகுதிகள் முடிவானால் மட்டுமே ராகுலின் யாத்திரையில் பங்கேற்பேன் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி, ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை காங்கிரசுக்கு சீட் ஒதுக்காமல் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. டில்லியில் 7 லோக்சபா தொகுதிகளில் காங்கிரசுக்கு ஒரு சீட் மட்டும் கொடுக்கப்படும் என ஆம்ஆத்மி தெரிவித்தது.
இப்படி பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளே காங்கிரசை புறக்கணித்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, காங்கிரசுக்கு 11 இடங்களை ஒதுக்குவதாக அறிவித்தது. ஆனால், இதுவரை எந்தெந்த தொகுதிகள் என முடிவாகாமல் இருந்தது.
இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி., ராகுல் மேற்கொண்டுவரும் 'பாரத் ஒற்றுமை நியாய' யாத்திரையில் பங்கேற்பது தொடர்பாக அகிலேஷ் யாதவ் நிபந்தனை விதித்துள்ளார். அவர் கூறுகையில், ''தொகுதி ஒதுக்கீடு பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. காங்., தரப்பில் இருந்து விருப்ப பட்டியல் வந்துள்ளது. எந்தெந்த சீட்கள் பகிர்ந்தளிப்பது என முடிவானால் மட்டுமே காங்கிரசின் நியாய யாத்திரையில் சமாஜ்வாதி கட்சி பங்கேற்கும்'' என அகிலேஷ் கூறினார்.

