புத்தாண்டு கொண்டாட்டத்தால் இரண்டு சாலைகளில் 15 டன் குப்பை 4 மணி நேரத்தில் சுத்தம் செய்த தொழிலாளர்கள்
புத்தாண்டு கொண்டாட்டத்தால் இரண்டு சாலைகளில் 15 டன் குப்பை 4 மணி நேரத்தில் சுத்தம் செய்த தொழிலாளர்கள்
ADDED : ஜன 02, 2025 06:17 AM

பெங்களூரு: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பெங்களூரின் எம்.ஜி., சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சேர்ந்த 15 மெட்ரிக் டன் குப்பையை நான்கு மணி நேரத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் அகற்றினர்.
இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டம், ஜோராக நடந்தது. எம்.ஜி., சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், விடிய, விடிய கொண்டாட்டம் நடந்தது. இதனால் இந்த சாலைகள் குப்பைக்காடாக மாறின.
பொதுமக்கள் வீசிய குடிநீர் பாட்டில்கள், தின்பண்ட கவர்கள், பிளாஸ்டிக் கவர்கள், மதுபான பாட்டில்கள், செருப்புகள் என, சாலையெங்கும் குப்பை குவிந்து கிடந்தது.
எம்.ஜி., சாலை, பிரிகேட் சாலை, சர்ச் தெரு, ரெசிடென்சி சாலை, ரிச்மென்ட் சாலை, செயின்ட் மார்க்ஸ் சாலை, கஸ்துாரி பா சாலை உட்பட, பல்வேறு சாலைகளில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள், இன்று (நேற்று) அதிகாலை 3:00 மணிக்கு துப்புரவுப் பணியை துவக்கினர். முழுமையாக குப்பையை அள்ளி முடிக்க, 7:00 மணியானது. 15 மெட்ரிக் டன் குப்பை சேர்ந்தது.
இப்பணியில் 70க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள், ஈடுபட்டனர். 25 ஆட்டோ டிப்பர்கள், 3 காம்பாக்டர்களில் குப்பை அள்ளப்பட்டது.
குப்பை தரம் பிரிக்கப்பட்டு, குப்பை மறுசுழற்சி மையத்துக்கு அனுப்பப்பட்டது. காலை 7:00 மணிக்கே இவ்வளவு குப்பையை அகற்றி, சுத்தம் செய்ததால் பொது மக்கள் பாராட்டினர். நடை பயிற்சியாளர்களும் மகிழ்ந்தனர்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

