சுரங்கத்தில் திடீரென புகுந்த வெள்ளம்! தப்பிக்க வழியின்றி தவிக்கும் 20 தொழிலாளர்கள்
சுரங்கத்தில் திடீரென புகுந்த வெள்ளம்! தப்பிக்க வழியின்றி தவிக்கும் 20 தொழிலாளர்கள்
ADDED : ஜன 06, 2025 07:55 PM

திஸ்பூர்; அசாம் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெள்ளம் புகுந்ததால் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
டிமா ஹசாவ் மாவட்டம் உம்ரங்சோ என்ற பகுதியில் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் வழக்கம் போல் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தினுள் வெள்ளம் புகுந்துள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த நிகழ்வால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தப்பிக்க வழியில்லாமல் உள்ளேயே தவித்தனர். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். ராட்சத எந்திரங்கள் கொண்டு அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட எஸ்.பி., மயங்க்குமார் சம்பவ பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: சுரங்கத்தினுள் பலர் சிக்கிக் கொண்டிருப்பதாக அறிகிறோம். மொத்தம் எத்தனை பேர் உள்ளே தவிக்கின்றனர் என்ற விவரம் இல்லை. இருப்பினும் அனைவரையும் மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.