உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை அமைப்பு: இறுதிக்கட்ட பணி வெற்றிகரம்
உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை அமைப்பு: இறுதிக்கட்ட பணி வெற்றிகரம்
UPDATED : ஜூன் 09, 2026 04:41 PM
ADDED : ஜூன் 09, 2026 04:37 PM

நமது நிருபர்
உலகின் மிக நீளமான இருவழிச் சாலை சுரங்கப்பாதையான சோஜிலாவில் இறுதிக்கட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது இமாலய சாதனையாகும்.
இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இமயமலையின் மிகக் கடினமான பகுதியில் அமைக்கப்படும் சோஜிலா சுரங்கப்பாதை பணி வெற்றிகரமாக நிறைவு அடைந்துள்ளது . மிக மிக உயரமான மலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள, உலகின் மிக நீளமான இருவழிச் சாலை சுரங்கப்பாதை என்ற பெருமையை இது பெற உள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதியை இணைக்கும் சோஜிலா சுரங்கப்பாதை, கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக நீண்ட ஒற்றைக் குழாய் இருவழிச் சாலை சுரங்கப்பாதை ஆகும். சுரங்கப்பாதை 13.15 முதல் 14.2 கி.மீ. நீளம் கொண்டது. இதில் ஒற்றைக் குழாய்க்குள் இரு திசைகளிலும் வாகனங்கள் செல்லக்கூடிய இருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நிருபர்களிடம் கூறியதாவது: இது அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு சுரங்கப்பாதை. உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்புத் தரநிலைகளுடன் கட்டப்பட்டுள்ள இது, லே மற்றும் லடாக் பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும். நான் பாஜ தலைவராக இருந்தபோது லடாக்கிற்குச் சென்றிருந்தேன்.
அப்போது அங்குள்ள மக்கள், ஆறு மாதங்களுக்குப் போக்குவரத்து வசதி இன்றி அனைத்தும் முடங்கிக் கிடப்பதாக என்னிடம் கூறினர். உள்ளூர் மக்கள் சந்திக்கும் இத்தகைய பெரும் சிரமங்களைக் கண்டு நான் மிகவும் வேதனைப்பட்டேன். 2014ல் பிரதமர் மோடி தலைமையில் எங்கள் அரசு பதவியேற்றபோது, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அவர் மிக உயர்ந்த முன்னுரிமை அளித்தார். இத்துறையின் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட ஒப்பந்த மதிப்பு ரூ. 12,000 கோடியாக இருந்தது; ஆனால், தற்போது ரூ. 7,000 கோடியிலேயே அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன என்பதையும், இதன் மூலம் குறைந்தது ரூ. 5,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது வெறும் சுரங்கப்பாதை மட்டுமல்ல, இப்பகுதியின் வாழ்வாதாரத்தை இணைக்கும் ஒரு முக்கியப் பாதையாகவும் திகழும். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
