ADDED : பிப் 04, 2024 01:34 AM

கோடா: ஜார்க்கண்ட் மாநிலத்தில், பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல், அங்குள்ள வைத்தியநாதர் கோவிலில் நேற்று பயபக்தியுடன் வழிபாடு நடத்தினார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பாரத ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணத்தை, ஜன., 14ல் மணிப்பூரில் துவக்கினார். அவரின் யாத்திரை நேற்று காலை ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தை அடைந்தது.
அங்குள்ள தேவ்கர் நகருக்கு சென்ற ராகுல், புகழ்பெற்ற பாபா வைத்தியநாதர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
அப்போது, சட்டையின்றி பட்டு வேட்டி, துண்டு அணிந்து, நெற்றியில் பெரிய அளவில் விபூதி, குங்குமம் பூசி பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
நடைபயணத்தை முடித்து, இரவு தன்பாத் தொகுதியில் தங்கினார். இந்த யாத்திரையின் போது, ஜார்க்கண்ட் மாநிலத்தில், 13 மாவட்டங்களுக்கு அவர் செல்கிறார்.
கோடா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
ஜார்க்கண்ட் மக்கள் காங்., ஆதரவு அரசை தேர்ந்தெடுத்தனர். ஆனால், பிரதமர் மோடி அரசு, அமலாக்கத்துறை, சி.பி.ஐ.,யை பயன்படுத்தி, பா.ஜ.,வை எதிர்த்த அனைவரையும் சிறையில் அடைத்தது.
இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, பா.ஜ., கைப்பற்ற முற்பட்டது. காங்கிரஸ் உறுதியாக நின்று ஜார்க்கண்ட் அரசையும், மக்கள் தீர்ப்பையும் காப்பாற்றி உள்ளது.
இவ்வாறு பேசினார்.