'நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றை உண்மையுடன் எழுதுங்கள்'
'நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றை உண்மையுடன் எழுதுங்கள்'
ADDED : ஜன 03, 2025 11:56 PM

புதுடில்லி: “நம் நாட்டின் வரலாற்றை முகலாயர் காலத்தில் இருந்து ஆங்கிலேயர் காலம் வரைக்குமாக சுருக்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம் வரலாற்றை உண்மைகளுடன் எழுதி, பெருமையுடன் உலகிற்கு முன்வைக்க வேண்டும்,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசு நிறுவனமான 'நேஷனல் புக் டிரஸ்ட்' சார்பில் 'ஜம்மு - காஷ்மீர் அண்ட் லடாக் த்ரூ த ஏஜஸ்' என்ற வரலாற்று புத்தகம் டில்லியில் வெளியிடப்பட்டது.
புவிசார் அரசியல்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கின் வரலாறு படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியின் வரலாறும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. உலகளாவிய நாகரிகங்களுக்கு நாம் பங்களிப்புச் செய்துள்ளோம்.
ஆனால், ஆங்கிலேயர்கள் காலத்தில் இதை மறக்கடிக்க முயற்சிகள் நடந்தன.
இந்த தேசம் ஒருபோதும் ஒன்றுபடவில்லை என்றும், சுதந்திரம் என்ற எண்ணம் தேவையற்றது என்றும் ஒரு கட்டுக்கதை அவர்களால் பரப்பப்பட்டது. இந்த பொய்யை பலர் ஏற்றனர்.
உலகின் அனைத்து நாடுகளின் எல்லைகளும் போர் அல்லது ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட எல்லைகளால் ஆனவை. இதை புவிசார் அரசியல் என்போம்.
ஆனால், உலகிலேயே கலாசாரத்தினாலான எல்லைகளை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் ஒடிசா வரையிலும் கலாசாரத்தின் காரணமாக நாம் இணைந்துள்ளோம். நாடுகளை புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களால், நம் நாட்டை பற்றி வரையறுக்க முடியாது.
பெருமை
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, காஷ்மீர் மற்றும் ஜீலம் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் உள்ளன.
எனவே, காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. சட்டத்தைப் பயன்படுத்தி அதைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சட்டத்தையே நீக்கிஉள்ளோம்.
ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்காக எழுதப்பட்ட இந்திய வரலாற்றில் முகலாயர்கள் காலம் முதல் ஆங்கிலேயர்கள் காலம் வரையிலான சில நுாறு ஆண்டுகள் மட்டுமே உள்ளன.
இந்திய வரலாற்றாசிரியர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம் வரலாற்றை உண்மைகளுடன் எழுதி உலகத்தின் முன் பெருமையுடன் முன்வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

