தசரா விழாவை துவக்குகிறார் எழுத்தாளர் ஹம்பா நாகராஜய்யா
தசரா விழாவை துவக்குகிறார் எழுத்தாளர் ஹம்பா நாகராஜய்யா
ADDED : செப் 21, 2024 07:08 AM

மைசூரு: பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்கள் மூலம் ஆண்டுதோறும் மைசூரு தசரா விழா துவக்கி வைக்கப்படும். நடப்பாண்டு அக்., 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை மைசூரு தசரா விழா நடைபெறுகிறது. நடப்பாண்டு தசராவை யார் துவக்கி வைப்பது உட்பட பல விவகாரங்கள் குறித்து முதல்வர் சித்தராமையா தலைமையில் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடந்தது.
மைசூருக்கு நேற்று வந்த முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''நடப்பாண்டு மைசூரு தசராவை, துவக்கி வைப்பவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை, என்னிடம் அளித்துள்ளனர். இம்முறை தசராவை, பிரபல எழுத்தாளர் ஹம்பா நாகராஜய்யா துவக்கி வைப்பார். இது தொடர்பாக அவருக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படும்,'' என்றார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுாரின் ஹம்சந்திரா கிராமத்தில், 1936 அக்., 7ல் பிறந்தவர் ஹம்பா நாகராஜய்யா, 88. மைசூரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர், பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., பட்டம் பெற்றார்.
அதன்பின், மைசூரு மஹாராணி கலை, வணிக கல்லுாரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, ஷிவமொகா, மாண்டியா, தாவணகெரே, பெங்களூரின் பல கல்லுாரிகளில் பேராசிரியராக பணியாற்றினார்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உட்பட உலகின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் கவுரவ விருந்தினராக பங்கேற்றுள்ளார். கர்நாடக சாகித்ய அகாடமி விருது, ஜனபத யக் ஷகானா விருது, கர்நாடக ராஜ்யோத்சவா விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது பெங்களூரு ராஜாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.