யமுனை துாய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு?
யமுனை துாய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு?
ADDED : பிப் 13, 2025 09:57 PM
புதிதாக பதவியேற்கும் பா.ஜ., அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் யமுனை நதியை துாய்மைப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய தலைநகர் டில்லி வழியே 52 கி.மீ., யமுனை பாய்ந்து செல்கிறது. முந்தைய தேர்தலின் வாக்குறுதியாக யமுனை நதியை துாய்மைப்படுத்துவதை ஆம் ஆத்மி பிரதானமாக அறிவித்திருந்தது. இதுதொடர்பாக எந்த முயற்சியும் செய்யாத ஆம் ஆத்மி, சட்டசபைத் தேர்தல் வேளையில் ஹரியானாவில் பாயும் யமுனையில் விஷம் கலக்கப்படுவதாக பகீர் குற்றச்சாட்டை கூறியது.
இதை பா.ஜ., ஆதாரத்துடன் மறுத்தது. டில்லிக்குள் நுழையும் இடத்தில் யமுனை நதியின் துாய்மை நிலவரம் என்ன, பின் வாஜிராபாத், ஐ.எஸ்.பி.டி., பிரிட்ஜ், ஐ.டி.ஓ., பிரிட்ஜ், ஓக்லா அஸ்கர்பூர் ஆகிய இடங்களில் யமுனை நதியின் மாசுபாடுகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை வாயிலாக பா.ஜ., பட்டியலிட்டது.
யமுனை விவகாரத்தில் ஆம் ஆத்மி செய்யத் தவறியதை வாக்காளர்களிடம் பா.ஜ., கொண்டு சேர்த்தது. இது தேர்தல் வேளையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க ஆம் ஆத்மியால் முடியவில்லை.
இதையடுத்து யமுனை நதியை மீட்டெடுப்பதை தேர்தலில் ஆயுதமாக பா.ஜ., பயன்படுத்திக் கொண்டது. எதிர்பார்த்ததைப் போலவே, சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மை பலம் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை செயல்படுத்த பா.ஜ., தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பதவியேற்ற பின் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் யமுனை நதியை துாய்மைப்படுத்துவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
யமுனை நதிக்கரை மேம்பாட்டுத் திட்டம், ஆற்றங்கரைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர் ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை புதிய பா.ஜ., அரசு அறிவிக்கக்கூடும் என, அக்கட்சி வட்டாரங்கள் நேற்று முன் தினம் தெரிவித்தன.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தன் அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின், புதிய அரசு பதவியேற்பதற்கான பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -

