ADDED : ஆக 21, 2025 10:14 PM

யமுனையில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி சென்றது. எனினும் நீர்மட்டம் வெகுவாக குறையும் என அரசு தெரிவித்துள்ளது.
உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் டில்லி வழியே பாயும் யமுனை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவின் ஹத் னிகுண்ட் அணையிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, யமுனை ஆற்றின் பிரதான கால்வாயில் 1.7 லட்சம் கனஅடிக்கும் அதிகமான நீர் திறக்கப்பட்டது.
கண்காணிப்பு இதனால் கடந்த நான்கு நாட்களாகவே யமுனையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் நேற்று படிப்படியாக குறைந்தது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி, பழைய ரயில்வே பாலத்தில் 204.76 மீட்டர் என்ற அளவில், அபாயக் குறிக்குக் கீழே யமுனையின் வெள்ளம் இருந்ததாக முதல்வர் ரேகா குப்தா, தன் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், 'யமுனை நதியில் அபாயக்குறிக்கு கீழே வெள்ளம் பாய்ந்து வருகிறது. நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.
நிலைமையை கண் காணிக்க மாநில அரசு சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்திஉள்ளது.
நீர்வரத்து குறைந்ததால் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 31,016 கன அடி நீரும் வஜிராபாத் தடுப்பணையில் இருந்து 41,200 கன அடிநீரும் வெளியேற்றப்பட்டது.
இதற்கிடையில் சமீபத்தில் பெய்த மழை யால் நிதாரி, கிராரி மோலார் பந்த், மதன்பூர் காதர் ஆகிய இடங்களில் பல பள்ளிகளில் மழை வெள்ளம் புகுந்தது.
நடவடிக்கை இந்த பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தண்ணீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாநில கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட பள்ளி களில் நீர் தேங்குவதைத் தடுப்பது, வடிகால் அமைப்புகளை மேம்படுத்துவது, உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, எதிர்காலத்தில் பள்ளிகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான உத்தியைத் தயாரிக்கும்படி, பொதுப் பணித்துறை, டில்லி ஜல் போர்டு, நீர்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாடு, டில்லி மாநகராட்சி அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
- நமது நிருபர் -