யமுனை நதிநீர் சுத்தமாக இருக்கிறது: அமைச்சர் வர்மா
யமுனை நதிநீர் சுத்தமாக இருக்கிறது: அமைச்சர் வர்மா
ADDED : அக் 26, 2025 02:11 AM

புதுடில்லி: சத் பூஜை நேற்று துவங்கிய நிலையில், “யமுனா நதிநீர் கடந்த ஆண்டை விட மிகவும் சுத்தமாக இருக்கிறது,” டில்லி நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறினார்.
வடமாநிலங்களில் நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் சத் பூஜை நேற்று துவங்கியது. நீர் நிலைகளில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிலையில், யமுனை நதி மிகவும் மாசடைந்து உள்ளதாக, ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பல்லா, வஜிராபாத் தடுப்பணை, ஓக்லா தடுப்பணை, ஐ.டி.ஓ., மற்றும் யமுனா கால்வாய் உள்ளிட்ட எட்டு இடங்களில் இருந்து கடந்த 9 மற்றும் 20 ஆகிய தேதிகளில் டில்லி மாசு கட்டுப்பாட்டு குழு யமுனா நீர் மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்தது.
யமுனா நதி நீரில் பாக்டீரியா அளவு கடந்த ஆண்டு 100 மில்லிக்கு 11 லட்சம் யூனிட்டுகளாக இருந்தது. அதுவே இந்த ஆண்டு நிஜாமுதீனில் 100 மில்லிக்கு 7,900 யூனிட்டுகளாக குறைந்துள்ளது. அதேபோல, பல்லாவில் 920ல் இருந்து 600 ஆகவும், வஜிராபாத்தில் 16,000ல் இருந்து 800 ஆகவும், ஐ.டி.ஓ.,வில் 35,000ல் இருந்து 7,000 யூனிட்டுகள் ஆகவும் பாக்டீரியா அளவு குறைந்துள்ளது.
முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., அரசு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறது. சத் பூஜை கொண்டாட்டத்துக்காக அரசு செய்துள்ள ஏற்பாடுகளை பெண்கள் பாராட்டுவதாலும், ஆம் ஆத்மி கட்சி கடும் குழப்பம் அடைந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் டில்லி தலைவர் சவுரவ் பரத்வாஜ் உட்பட அக்கட்சியின் தலைவர்கள் யமுனை நதி மாசுபட்டுள்ளதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால், ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற நீர் மாதிரி எடுத்து பரிசோதனை அறிக்கை வெளியிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆம் ஆத்மி டில்லி மாநில தலைவரும், முன்னாள் அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “யமுனை நதி நீர் குளிக்க கூட ஏற்றதல்ல. அதில், மனிதக் கழிவுகள் ஏராளமாக கலந்து இருக்கிறது,”என, கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி சவால்
ஆம் ஆத்மி கட்சி டில்லி மாநில தலைவர் சவுரவ் பரத்வாஜ் நேற்று கூறியதாவது:
முதல்வர் ரேகா குப்தாவும், அமைச்சர்களும் யமுனை நதி சுத்தம் செய்யப்பட்டு விட்டதாக பொய்களை பரப்பி வருகின்றனர்.
யமுனை நதியை சுத்தம் செய்ய ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், துணைநிலை கவர்னர் அதை தடுத்து நிறுத்தினார். தற்போது யமுனை நதி சுத்தமாக இருப்பதாக கூறும் முதல்வர் ரேகா குப்தா, யமுனை நீரை குடித்து நிரூபிக்க வேண்டும். இந்த சவாலுக்கு அவர் தயாராக இருக்கிறாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, யமுனை நதியில் இருந்து சேகரிக்கப்பட்டதாக கூறி, மாசு நிறைந்த தண்ணீர் மாதிரியை நிருபர்களிடம் பரத்வாஜ் காட்டினார்.

