அபாய அளவை தாண்டிய யமுனை நீர் டில்லியில் வெள்ள பெருக்கு அபாயம்
அபாய அளவை தாண்டிய யமுனை நீர் டில்லியில் வெள்ள பெருக்கு அபாயம்
ADDED : ஆக 26, 2025 10:15 PM
புதுடில்லி:யமுனை நதியில் பழைய ரயில்வே பாலத்துக்கு அருகில், அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழும் அபாயம் நிலவுகிறது.
டில்லியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இந்நிலையில், டில்லியில் நேற்றும் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. சிவில் லைன்ஸ், செங்கோட்டை, லஜ்பாத் நகர், நரேலா, பவனா, அலிபுர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாலையில் பள்ளி மற்றும் அலுவலகம் முடிந்து சென்றவர்கள், அவதிக்கு ஆளாகினர்.
இந்நிலையில், டில்லியில் பழைய ரயில் பாலத்துக்கு அருகில் நேற்று மாலை, யமுனை நதியில் அபாய அளவை தாண்டி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 204.50 மீட்டர் என்ற அபாய அளவை தாண்டி, 204.58 மீட்டர் என்ற அளவில் வெள்ளம் பாய்ந்தது.
இன்றும் பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், யமுனை நதியின் கரையோர பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வசீர்பாத், ஹாத்னிகண்ட் ஆகிய அணைகட்டு பகுதிகளில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால், யமுனையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஹாத்னிகண்ட் அணையிலிருந்து, 36,658 கன அடி நீரும், வசீர்பாத் அணையிலிருந்து, 35,640 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
மழை அதிகரிக்கும் பட்சத்தில், மேலும் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படும். இதனால், யமுனை கரையோர பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.