ADDED : ஆக 19, 2025 08:05 AM

புதுடில்லி: டில்லி பழைய ரயில்வே பாலம் அருகே நேற்று மதியம் 2:00 மணிக்கு யமுனை நதி நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டி 205.36 மீட்டரை எட்டியது. நதியின் நீர்மட்டம் 206 மீட்டரை எட்டினால் கரையோர மக்கள் வெளியேற்றப்படுவர்.
நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு 204.60 மீட்டராக இருந்த நீர்மட்டம் நேற்று அதிகாலை 204.80 மீட்டரை எட்டியது. நாளை, 206 மீட்டரை தாண்டும் என நீர்வளத் துறை நிபுணர்கள் கணித்துள்ளனர். ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து, 36,064 கனஅடி, வஜிராபாத் தடுப்பணையில் இருந்து 57,460 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் டில்லியை அடைய, 48 முதல் 50 மணி நேரம் ஆகும். இரு அணைகளிலும் நீர் திறக்கப்படுவதே யமுனையில் நீர்மட்டம் உயர காரணமாகிறது.